செய்திகள்

ஜாதிக ஹெல உறுமய அரசிலிருந்து வெளியேறுமா? செவ்வாயன்று இறுதி முடிவு

அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய, அரசியல் ரீதியான முக்கியமான தீர்மானமொன்றை, நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை எடுக்கவிப்பதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் மத்தியகுழு அன்றைய தினம் கூடுவதுடன் அரசாங்கத்துக்கும் ஹெல உறுமயவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பிலான அறிக்கையும் மத்தியக்குழுவுக்கு கையளிக்கப்படவிருக்கின்றது.

அரசாங்கத்திடம் முக்கியமான சில கோரிக்கைகளை முன்வைத்த ஜாதிக ஹெல உறுமய அவற்றை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு ஒன்றையும் முன்வைத்திருந்தது. இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுடன் ஹெல உறுமய பேச்சுக்களை நடத்தியிருந்த போதிலும் அந்தப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடைந்திருந்தன.

இந்த நிலையில், அரசிலிருந்து ஹெல உறுமய வெளியேற வேண்டும் என்ற கொரிக்கை கட்சிக்குள்ளேயே மேலோங்கிவருகின்றது. இது தொடர்பில் முக்கிய தீர்மானம் ஒன்றை ஹெல உறுமய எடுக்கும் எனத் தெரிகின்றது.