செய்திகள்

ஜூனில் வெளியாகிறது கமலின் பாபநாசம்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால், மீனா ஆகியோர் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘த்ரிஷ்யம்’.

இந்தப் படம் மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து மொழியினரையும் வெகுவாகக் கவர்ந்தது. குடும்பத்திற்காக ஒரு கொலையை மறைக்க முயலும் மிடில்கிளாஸ் குடும்பஸ்தனின் கதையை த்ரில்லர் கலந்து சொல்லியிருந்தார்கள். இப்படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழி ரீமேக் உரிமையையும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் நிறுவனம் பெற்றது.

ஏற்கெனவே இப்படம் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஹிட்டடித்துவிட்டது. இந்நிலையில் த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் கமல் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கி வந்தார். மற்ற மொழிகளில் வேறு இயக்குனர்கள் ரீமேக் படத்தை இயக்கியிருந்தாலும் தமிழில் மட்டும் அதே இயக்குனரே இப்படத்தை இயக்கியிருக்கிறார். அதுபோல மற்ற மொழிகளில் அதே பெயரில் இப்படம் வெளியானாலும் தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் தயாராகியுள்ளது.

இதில் கமலுடன் கெளதமி, சார்லி, கலாபவன் மணி, டெல்லி கணேஷ், பேபி எஸ்தர், நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் தற்போது படம் வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. மே 1ம் தேதி கமலின் ‘உத்தம வில்லன்’ படம் வெளியாக இருப்பதால் அதைத்தொடர்ந்து ஜூனில் ‘பாபநாசம்’ படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.