செய்திகள்

ஜூலியட் படத்துக்கு எதிராக நடிகர் டி ராஜேந்தர் வழக்கு

டன்னடனக்கா பாடல் தன்னை இழிவுபடுத்துவதாகக் கூறி ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட் படத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார் இயக்குநர் – நடிகர் டி ராஜேந்தர். ஜெயம் ரவி, ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் படம் ‘ரோமியோ ஜூலியட்’. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘டண்டனக்கா’ என துவங்கும் பாடல் பெரும் வரவேற்பையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. ‘டண்டனக்கா’ என்ற வாரித்தை டி.ராஜேந்தர் தன் படங்களில் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை. அது இப்போதைய காமெடியன்களான சந்தானம் போன்றவர்கள் தங்கள் படங்களில் தமாஷாகப் பயன்படுத்தி வந்தனர்.
இந்த வார்த்தையைப் பயன்படுத்தித்தான் ரோமியே ஜூலியட்டில் ஒரு பாடல் உருவாக்கப்பட்டது. அதனை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இந்தப் பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்தப் பாடல் குறித்த சர்ச்சை வெளியானதுமே, ‘டண்டனக்கா’ பாடலில் டி.ராஜேந்தரை இழிவுபடுத்தவில்லை என்று ஜெயம்ரவி மறுத்தார். இந்த நிலையில் ‘டண்டனக்கா’ பாடலை எதிர்த்து டி.ராஜேந்தர் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக ‘ரோமியோ ஜுலியட்’ தயாரிப்பாளர் நந்தகோபால், இயக்குநர் லஷ்மன், இமான், அனிருத் ஆகியோருக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ராஜேந்தரிடம் கேட்டபோது, “டண்டனக்கா பாடலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்படி எனது வக்கீலிடம் அறிவுறுத்தி இருக்கிறேன். அதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன” என்றார். இந்தப் படம் மற்றும் பாடலை ராஜேந்தருக்கு போட்டுக் காட்டத் தயாராக உள்ளதாகவும், அவர் ஆட்சேபித்தால் காட்சிகளை நீக்குவதாகவும் ரோமியோ ஜூலியட் தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது.