செய்திகள்

ஜூலை 10 வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் விநியோகம்!

இன்று (27) நள்ளிரவு முதல் ஜூலை 10 வரை அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதற்காக மாத்திரம் டீசல் மற்றும் பெற்றோலை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, துறைமுகங்கள், சுகாதாரத் துறை, அத்தியாவசிய உணவு விநியோகம், மற்றும் விவசாயப் பொருட்களின் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் டீசல் மற்றும் பெற்றோலை விநியோகிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தும் அநேகமாக இடைநிறுத்தப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல், எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை குறுந் தூர பொதுப் போக்குவரத்தை இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் ஊடாக வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பாடசாலைகளை நடாத்துவது தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை மாகாண கல்வி பணிப்பாளர் மற்றும் பாடசாலை பிரதானிகளுக்கு வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சரினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பொது போக்குவரத்து அதிகளவில் தேவைப்படாத கிராமப் புற பாடசாலைகளை நடாத்திச் செல்ல முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சமையல் எரிவாயு மற்றும் எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிப்பதற்காக பொறிமுறையானது ஜுலை மாதம் 10 ஆம் திகதிக்கு பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

-(3)