செய்திகள்

”ஜெனிவா அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டோம் – அச்சமின்றி முகம் கொடுப்போம்” : ஜனாதிபதி

”ஜெனீவா அழுத்தத்திற்கு நாம் அச்சமின்றி முகம்கொடுப்போம். அதற்கு அடிபணியாமல் இருக்க முடியும். நாங்கள் ஒரு சுதந்திர நாடு. இந்து சமுத்திர அதிகாரப் போராட்டத்திற்கு நாங்கள் பலியாக மாட்டோம்” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்டத்தில் பிடபெத்தற பிரதேச செயலகப் பிரிவில் கிரிவெல்கெலே வடக்கு கிராம சேவகர் பிரிவில் தேரங்கல மகா வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்ற “கிராமத்துடன் உரையாடல்” 16வது நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் முட்டாள்தனமான நடவடிக்கைகளால் தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அதன் விளைவாகும். ஆதாரமற்ற குற்றச்சாட்டில் படைவீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜெனீவா தீர்மானத்திற்கு இணை அனுசரணை அளிக்கும் அளவுக்கு நாட்டின் இறையாண்மை சிதைந்தது. பழக்கப்பட்ட யானைகள் தொடர்பில் பிரச்சினை ஏற்படுத்தி கலாச்சாரம், மதம் மற்றும் பாரம்பரியத்தை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எம்.சி.சி ஒப்பந்தம் மற்றும் கிழக்கு முனையம் போன்ற ஒப்பந்தங்களுக்கு வந்தபோது நாடு பெரும் நெருக்கடியில் மூழ்கியது. அவற்றுக்கு இன்று தீர்வுகள் வழங்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை ஜெனீவா விடயத்தில் நாம் அச்சமின்றி முகம்கொடுப்போம். அதற்கு அடிபணியாமல் இருக்க முடியும். நாங்கள் ஒரு சுதந்திர நாடு. இந்து சமுத்திர அதிகாரப் போராட்டத்திற்கு நாங்கள் பலியாக மாட்டோம் என்று கூறியுள்ளார்.
-(3)