செய்திகள்

ஜெனிவா பிரேரணை தொடர்பாக கனடா தூதுவருடன் ஈ.பி.டி.பி சந்திப்பு

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றம் தொடர்பான அறிக்கையை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் செப்டெம்பர் வரை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைத்திருப்பது தொடர்பாக இலங்கைக்கான கனடா நாட்டின் உயர்ஸ்தானிகர் செலி விற்றிங்குடன் விரிவான கலந்துரையாடல் ஒன்றை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் நடத்தியுள்ளனர்.

மேற்படி சந்திப்பில், ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவருமான சின்னத்துரை தவராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில்  உள்ள எக்ஸ்போ பவிலியன் மாகோசா விடுதியில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் மேலும் இலங்கையின் தற்கால அரசியல் விவகாரங்கள், கனடாவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கான உதவித்திட்டங்கள் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டன. சமகால அரசியல் விவகாரங்களில் புதிய அரசிடம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களாகிய இராணுவ வசமிருக்கும் தனியார் காணிகளை விடுவித்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல், இராணுவப் பிரசன்னத்தைக் குறைத்தல், வடக்கு மாகாண சபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை சம்பந்தமான பிரேரணை போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், கடந்த காலங்களில் மீள் குடியேற்றத்தின் பின்னர் அழிந்து போன பிரதேசங்களை மீளக் கட்டியமைத்தல், மக்களின் வாழ்வாதார மேம்பாட்டை உருவாக்கி, அவர்களை இயல்பு வாழ்வில் ஈடுபடுத்தியது போன்றவற்றில் முன்னேற்றத்தை எட்டியிருப்பதைச் சுட்டிக்காட்டிய ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிப் பிரமுகர்கள், தொடர்ந்தும் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், யுத்தத்தால் மிக மோசமாகப் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்திட்டச் செயற்பாடுகள், சிறார்களுக்கான போசாக்கு மற்றும்  கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளின் மேம்பாடு ஆகியவற்றுக்கு கனடா ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் இந்தச் சந்திப்பில் வலியுறுத்தினர்.