செய்திகள்

ஜெனீவாவில் அதிகரித்துள்ள அமெரிக்காவின் ஆதிக்கம்: மகிந்த சமரவிங்க

ஜெனீவாவில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகளவில் காணப்படுவதாக தெரிவித்துள்ள முன்னாள் மனித உரிமைகள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த சமரசிங்க, தான் அதனை நேரில் கண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஜெனீவாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வேண்டியதில்லை, ஜெனீவாவின் நிலைமைகளை மாற்றிவிடுவதற்கு அந்நாட்டு இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரியின் ஒரு தொலைபேசி அழைப்பொன்றே போதும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தைக் கூறினார். கடந்த அரசாங்கம் மனித உரிமைகள் விவகாரத்தில் சர்வதேசத்தின் அழுத்தங்களை கவனத்திற் கொள்ளாமல் மேற்கொண்ட நடவடிக்கைகள் பிழை என்பதை சபையில் ஏற்றுக் கொண்ட அவர்,

எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்திற்கு நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்கள் பல உள்ளதாகவும் குறிப்பிட்டார். அதேவேளை, இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை கடந்த ஜெனீவா மாநாட்டில் கொண்டுவரப்படாமல் எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த செயற்பாட்டை வரவேற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க, எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவேற்றவேண்டிய பணிகளை பூர்த்தி செய்ய அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் கூறினார்.