செய்திகள்

ஜெனீவாவில் பிரேரணையை பிற்போடுவதற்கு அமெரிக்கா விருப்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மார்ச் மாத அமர்வில் இலங்கைக்கு எதிராக தற்போதைக்கு பிரேரணைகள் எதனையும் முன்வைக்ககூடாது என்ற நிலைப்பாட்டில் அமெரி;க்கா உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்களை மையமாக வைத்தே இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் உறுதியற்ற அரசியல் நிலையை கருத்தில்கொண்டே தற்போதைக்கு ஜெனீவா பிரேரணைகள் எதுவும் அவசியமில்லை என்ற முடிவிற்கு அமெரிக்கா வந்துள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
த மிழ் தேசிய கூட்டமைப்பினருடனான சந்திப்பின்போது அமெரிக்காவின் தென்னாசியாவிற்கான பிரதிஇராஜாங்க செயலாளர் நிசா பிஸ்வால் இதனை தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் வெளியேற்றம் குறித்து அமெரிக்கா மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ளது.மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில்விக்கிரமசிங்க ஆட்சியின்போது இரு நாடுகளுக்கும் இடையில் நட்புறவு உறுதிப்படும் என அது கருதுகின்றது.ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் வலுவான பிரேரணையை கொண்டுவருவதன் மூலமாக இலங்கையின் புதிய அரசாங்கத்தினுடனான உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தஅது விரும்பவில்லை.
மேலும் இலங்கைக்கு எதிராக கடுமையான பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டால் அதனை சிங்கள தீவிரதேசியவாதிகள் பயன்படுத்தலாம்,இது நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்ச அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வழிவகுக்கும் என நிசாபிஸ்வால் எச்சரித்துள்ளார்.
மேலும் ஐ.நாவில் முன்வைக்கப்படக்கூடிய உறுதியான பிரேரணை புதிய அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்திலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பிவிடலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் தமிழர் விவகாரத்தை மூடிமறைப்பதற்கு அனுமதிக்க முடியாது என தெளிவாக தெரிவித்துள்ளனர்.
கொழும்பிற்கும் வாசிங்டனுக்கும் இடையிலான உறவுகள் நெருக்கமான பின்னர் தமிழ் மக்களின் விவகாரங்கள் கைவிடப்படலாம்,ஏனைய இரு தரப்பு உறவுகள் முன்னுரிமை பெறலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது.
செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் அமர்வில் கூட இலங்கைக்கு எதிராக பிரேரணையை கொண்டுவருவார்களா என்பது குறித்து எங்களுக்கு சந்தேகமாகவுள்ளது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஏமாற்றம்வெளியிட்டுள்ளார்.
இலங்கை தனது நலனையும்,அமெரிக்காவும், இந்தியாவும் தங்கள் நலன்களையும் பார்க்கின்றன,தமிழர்களை தவிர அவர்களுடைய நலன்களை கவனிக்க எவரும் இல்லை இதன் காரணமாகவே நாங்கள் குரல்கொடுக்கின்றோம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.