செய்திகள்

ஜெனீவாவுடன் புதிய அணுகுமுறை, ’13 ‘ அமுலாக்கம் தொடர்பாக உறுதியளிப்பு: மங்கள சமரவீர

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுத் தொடர்பாக சர்வதேச சமூகத்துடன் விடயங்களைக் கையாள்வதில் முன்னைய ராஜபக்ஷவின் அரசாங்கம் கொண்டிருந்த நிலைப்பாட்டிலும் பார்க்க வேறுபட்ட அணுகு முறையை இலங்கையின் புதிய அரசாங்கம் மேற்கொள்ளுமென இந்திய அரசாங்கத்திற்கு கொழும்பு தெரிவித்திருக்கின்றது.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமர வீர இதனை டில்லிக்கு கூறியுள்ளார். ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நடவடிக்கைகளின் புதிய அணுகு முறையை எமது அரசாங்கம் மேற்கொள்ளும் . இதற்காக நாங்கள் உள்நாட்டுப் பொறிமுறையை ஏற்படுத்துவோம். அதற்கு சர்வதேச முகவர் அமைப்புகள் ஆதரவு அளிக்க முடியும் என்று மங்கள சமர வீர கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த தருணத்தில் குறுகிய காலப் பகுதியில் பதில் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன இருந்துள்ளார் எனக் கேட்கப்பட்டது . அத்துடன் அந்தக் கால கட்டத்திலேயே அநேகமான கொடுமைகள் இடம்பெற்றதாக நம்பப்படுகிறது. இந்நிலையில், இராணுவத்தின் செயற்பாடுகள் குறித்து அவரால் விளக்கமளிக்க முடியுமா என்று கேட்கப்பட்டது.

“இந்த விவகாரத்தில் உள்நாட்டு விசாரணைக்கு எனது ஜனாதிபதி முழுமையான ஒத்துழைப்பு வழங்குவாரென ‘ மங்கள சமர வீர கூறியுள்ளார். திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் ஊடக அமைப்புக்களை சேர்ந்த குழுவினர் மத்தியில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதேவேளை டில்லியில் இடம்பெற்ற தனது சந்திப்புக்கள் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் அமைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்வாரென எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை இந்தியப் பிரதமர் மோடி மார்ச்சில் கொழும்புக்கு விஜயம் மேற்கொள்வார். 1987 க்கு பின்னர் இலங்கைக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதலாவது உத்தியோக பூர்வ விஜயமாக இது அமையும். இது இவ்வாறு இருக்க இந்திய இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் சந்திப்பும் இலங்கையில் இடம்பெறவுள்ளது. அதில் பங்கேற்க இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜும் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இலங்கையின் புதிய அரசு தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்களுக்கான தனது நல்லிணக்க கொள்கை குறித்து இந்தியாவுக்கு விபரமாக எடுத்துரைத்திருக்கிறது. தமிழ்க் கூட்டமைப்பு நிர்வாகத்தின் இரு கோரிக்கையை அரசாங்கம் ஏற்கனவே நிறைவேற்றிருப்பதாக இந்திய பத்திரிகையாளர்களுக்கு மங்கள சமர வீர தெரிவித்திருக்கிறார்.

வட மாகாண இராணுவ ஆளுநரை அகற்றிவிட்டு முன்னாள் ஐ.நா. அதிகாரியும் இராஜதந்திரியுமான எச்.எம். ஜி.எம். பளிக காரவை ஆளுநராக புதிய ஜனாதிபதி நியமித்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இராணுவம் பயன்படுத்தும் காணி எவருடையது என்பதை அரசாங்கம் அடையாளம் கண்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அதேவேளை அமெரிக்காவால் முன்தள்ளப்பட்ட சர்வதேச விசாரணை போன்றதொன்றை நிராகரித்திருக்கும் மங்கள சமர வீர, மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறும் சந்திப்பின் போது சில இடைப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது குறித்து எதிர்பார்ப்பை வெளியிட்டிருக்கிறார். முன்னைய அரசின் நிலைப்பாட்டினாலேயே இலங்கை மீது ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் அதிகளவு நெருக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

அதேவேளை, அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் உறுதிப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், அடுத்த பாராளுமன்ற தேர்தலின் பின்னரே இது தொடர்பாக சகல கட்சிகளுடனும் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படுமென அவர் கூறியுள்ளார். மேலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இருந்து விடுதலைப் புலிகள் மீள எழுச்சி பற்றிய கவலைகளை அவர் அமத்தி வாசித்துள்ளார். கடந்த சில வருடங்களில் நாட்டை விட்டு வெளியேறிய சகல இலங்கையர்களையும் புதிய அரசாங்கம் வரவேற்குமென அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் குறித்து விபரித்த அவர் ; இலங்கையானது அரசு வசந்தத்தின் சொந்த மாதிரியைக் கொண்டிருக்கின்றது என்று கூறியுள்ளார். மாற்றமானது இலகுவானதாக இருந்திருக்கவில்லையெனவும் அவர் கூறியுள்ளார். அவசர கால நிலையை அமுல்படுத்துவதன் மூலம் அரசியல் புரட்சியை நடத்த ராஜபக்ஷ முயற்சித்திருந்ததாகவும் ஆனால், எமது ஆயுதப்படைகள் எங்களுடன் இருந்தன என்றும் கூறியுள்ள மங்கள சமர வீர, அன்றைய இரவு இடம்பெற்ற நிகழ்வுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படுமெனவும் தெரிவித்திருக்கிறார்.