செய்திகள்

ஜெனீவா அறிக்கையை தாமதப்படுத்த முடியாது: நிஷா விஸ்வாலிடம் கூட்டமைப்பு வலியுறுத்து

மார்ச் மாதத்தில் வெளியிடப்பட வேண்டிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை போர்க் குற்றம் குறித்த ஐ.நா. விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதை எக்காரணம் கொண்டும் தாமதப்படுத்த அனுமதிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்க பிரதி வெளிவிவகாரச் செயலாளர் நிஷா பிஸ்வாலிடம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் உதவி வெளிவிவகாரச் செயலாளர் நிஷா பிஸ்வால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை இன்று செவ்வாய்கிழமை காலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற இந்தப் பேச்சுக்களில் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அமெரிக்க உதவி வெளிவிவகாரச் செயலாளருடன் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவர் மற்றும் அதிகாரிகளும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு கைதிகள் விவகாரம், மீள்குடியேற்றம் உட்பட பல விடயங்கள் இங்கு ஆராயப்பட்டன. மீள்குடியேற்றத்தைப் பொறுத்தவரையில் அதனை விரைவுபடுத்த வேண்டும் எனவும், அதற்கான அழுத்தத்தை அமெரிக்கா கொடுக்க வேண்டும் எனவும் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகைள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானம் மீதான விவாதத்தை ஒத்திவைப்பது தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாட்டை நிஷா கேட்டபோது, கூட்டமைப்பினர் அதனை ஏற்க மறுத்துவிட்டதாகத் தெரிகின்றதுimage