செய்திகள்

ஜெனீவா கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்: அமைச்சர் மங்கள மாலை உரை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று இந்தக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

இன்று முதல் 27ம் திகதி வரை நடைபெறவுள்ள 28வது அமர்வில், இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், இலங்கையின் புதிய அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று அந்த அறிக்கை ஆறு மாதங்களுக்குப் பிற்போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தனது உரையில் குறிப்பிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, பேரவையின் இன்றைய அமர்வில் மூன்று கட்டங்களாக பல்வேறு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் உரையாற்றவுள்ளனர். காலை அமர்வில், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி உரையாற்றுவார். பிற்பகல் அமர்வில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் உரை இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, மங்கள சமரவீர பீஜிங்கில் இருந்து நேற்று ஜெனிவா சென்றிருந்தார். அவர் இன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல்ஹுசேனை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

இதன்போது, இலங்கை வருமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு  மங்கள சமரவீர முறைப்படி அழைப்பு விடுப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை இலங்கை அரசாங்கம் அமைக்க உத்தேசித்துள்ள உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை குறித்தும் ஆராய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.