செய்திகள்

ஜெனீவா நெருக்கடியை எதிர்கொள்வது எப்படி? அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கும் ரணில்

மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருக்கும் நிலையில், அதனை இலங்கை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பிக்கவிருக்கின்றார்.

ஐ.நா. மனித உரிமைகைள் பேரவையின் 28 ஆவது கூட்டத் தொடர் மார்ச் மாதம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. இதில் செயலாளர் நாயகம் இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மேற்கொண்ட விசாரணை அறிக்கையை முன்வைக்கவுள்ளார். இது இலங்கைக்கு பெரும் நெருக்கடியைக் கொடுப்பதாக அமையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதனை எதிர்கொள்வதற்கான தயாரிப்புக்களில் இலங்கை அரசாங்கம் இறங்கியிருக்கின்றது.

நிலைமைகளை அறிவதற்காக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், இராஜதந்திரியுமான ஜயந்த தனபால இன்று ஜெனீவா விரைகின்றார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் உட்பட முக்கிய அதிகாரிகளுடன் அவர் பேச்சுக்களை நடத்துவார்.

அதேவேளையில், ஜெனீவாவில் உருவாகக்கூடிய நெருக்கடிகளைச் சமாளிப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்யவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பிலான ஆலோசனைகள் இடம்பெற்றுவருவதாக பிரதமர் அலுவலகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மூன்று விடயங்களின் அடிப்படையிலேயே இந்த பத்திரத்தை பிரதமர் தயாரித்துவருகின்றார். அரசாங்க அதிகாரிகளுடன் இது தொடர்பில் ஆலோசனைகளை நடத்தி, அவர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கு ரணில் திட்டமிட்டுள்ளார். அவர்களுடைய கருத்துக்களும் அறிக்கையில் உள்ளடக்கப்படும். இரண்டாவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடனான ஆலோசனையின் போது பெற்றுக்கொள்ளப்படும் கருத்துக்கள் கவனத்திற்கொள்ளப்படும். மூன்றாவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஆலோசனை நடத்தி அதன் மூலம் பெறப்படும் கருத்துக்களும் இதில் உள்ளடக்கப்படும்.

இவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்படும் இறுதி அறிக்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்படும்.