செய்திகள்

ஜெனீவா மனித உரிமை அமர்வுக்கு விஷேட பிரதிநிதிகளை அனுப்புவதில்லை: இலங்கை அரசு

அடுத்த மாதம் இடம்பெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு விசேட பிரதிநிதிகள் அனுப்பி வைக்கப்பட மாட்டார்கள் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு விசெட பிரதிநிதிகள் குழுக்களை அனுப்பி வைத்திருந்தது.எனினும் புதிய அரசாங்கம் அவ்வாறு விசேட பிரதிநிதிகளை அனுப்பி வைப்பதில்லை என அறிவித்துள்ளது.

கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மஹாசினி கொலன்னே இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியொருவர் கடமையாற்றி வருவதனால், விசேட பிரதிநிதிகளை அனுப்பி வைக்க வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். விசேட பிரதிநிதிகள் குழுவொன்றை அனுப்பி வைப்பதனால் பாரியளவில் செலவு ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த கால அரசாங்கம் செய்ததனைப் போன்று பணத்தை விரயமாக்க விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை உறுப்புரிமை வகிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் விவகாரங்கள் தொடர்பில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு எவ்வித தடையும் கிடையாது எனவும், சொந்த செலவில் செய்திகளை சேகரித்துக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.