செய்திகள்

ஜெயக்குமாரியிடம் மகள் விபூசிகாவை ஒப்படையுங்கள்: நீதிமன்றில் இன்று மனு

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி என்று கூறப்படும் கோபி என்பவருக்கு புகலிடம் வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்ட ஜெயக்குமாரி பாலேந்திரனிடம் அவரது மகள் விபூசிகாவை ஒப்படைக்குமாறு கோரி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஏழு சட்டத்தரிகள் அடங்கிய குழுவொன்று மனுவொன்றை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜெயக்குமாரி பாலேந்திரன் கைதானதை அடுத்து அவரது மகளை சிறுவர் இல்லத்தில் சேர்க்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதற்கிணங்க, அச்சிறுமி தற்போது மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்ட அவரது தாயாரிடமே அவரை ஒப்படைக்குமாறு வலியுறுத்தியே நீதிமன்றத்தில் மேற்படி மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதேவேளை, கரைச்சி பிரதேச செயலகத்தின் பண்பாட்டு விழா செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற போது, அதில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்த விபூசிகா, ‘தனது தாயின் விடுதலைக்கு உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

‘எனது அம்மாவையும் என்னையும் கடந்த ஒரு வருடகாலமாக பிரித்து வைத்தனர். பலரது முயற்சியால் எனது அம்மா விடுதலை பெற்றுள்ளார். அவரைக் காண்பதற்கு ஆர்வமாகவுள்ளேன். எனது அம்மா செவ்வாய்க்கிழமை என்னுடன் தொலைபேசியில் உரையாடினார்’ என்று விபூசிகா மேலும் கூறியுள்ளார்.