செய்திகள்

ஜெயலலிதாவின் சொத்துகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: கர்நாடகா உச்ச நீதிமன்றம்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தின்; நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில்; நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் நேற்று விசாரணை நடைபெற்ற போதே அவரது பையனூர், சிறுதாவூர் மற்றும் கொடைக்கானல் சொத்துகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பவானி சிங், ஜெயலலிதாவிடம் இருந்து மற்றவர்களுக்கு பணம் சென்றதற்கு நேரடி ஆதாரம் எதுவும் இல்லை, சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மறைமுகமான ஆதாரங்களையும், ஆவணங்களையும் கொண்டு ரூ.66.65 கோடி சொத்து குவித்ததாக வழக்கு தொடுத்தனர்.

அவர்கள் எனக்கு கொடுக்கும் ஆவணங்களை கொண்டே என்னால் வாதிட முடியும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து பவானி சிங், சசிகலாவுக்கு சொந்தமான பையனூர் பங்களாவை மதிப்பீடு செய்த பொறியாளர் கோவிந்தன் அளித்த அரசு தரப்பு சாட்சியத்தை வாசித்தார். அதில், 1993-ல் பையனூரில் சசிகலா இரண்டு அடுக்கு பங்களா கட்டினார். பிறகு அந்த கட்டிடம் பல லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு புதிய சலவை கற்கள் பதிக்கப்பட்டன. இதற்காக மும்பையில் இருந்து இத்தாலி சலவை கல், வெள்ளை சலவை கல் உள்ளிட்ட பல வகையான விலை உயர்ந்த சலவை க‌ற்கள் வாங்கப்பட்டன. பையனூர் பங்களாவின் மொத்த மதிப்பு ரூ.5 கோடி ஆகும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர், பையனூர் பங்களா, போயஸ் கார்டன் வீடு, கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட அனைத்து இடங்களில் உள்ள கட்டிடங்களின் மொத்த மதிப்பு ரூ.29 கோடி என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளனர். அங்கு சுமார் ரூ.100, 150 விலையுள்ள சலவை கற்களை எல்லாம் ரூ.5919 என மிகைப்படுத்தி மதிப்பிட்டுள்ளனர் என்றார்.

அதற்கு பவானி சிங், இவ்வழக்கை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை அதிகாரிகள் சரியாக விசாரிக்கவில்லை. கட்டிடம், நிலத்தை மிகைப்படுத்தி மதிப்பீடு செய்தனர். இதனால் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அவர்களது மதிப்பீட்டை ஏற்காமல் 20 சதவீதம் சலுகை கொடுத்தது. வழக்கை பதிவு செய்துவிட்டு குற்றச்சாட்டை தேடியுள்ளனர் என்றார்.

உடனே நீதிபதி குமாரசாமி, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி சம்பந்தத்தை அழைத்து, எதன் அடிப்படையில் சொத்துகளை மதிப்பீடு செய்தீர்கள். கட்டிடங்களை மதிப்பிட்ட பொறியாளர்களில் 2 பேரை வருகிற 9-ம் தேதி நீதிமன்றத்திற்கு வர சொல்லுங்கள். பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் எதற்காக ஜெயலலிதா தரப்புக்கு மதிப்பீட்டில் 20% சலுகை அளித்தது? 50% முதல் 60% வரை தந்திருக்கலாமே? என்றார். இதையடுத்து அரசு வழக்கறிஞர் பவானிசிங், இவ்வழக்கில் சாட்சியம் அளித்துள்ள பொறியாளர்களின் வாக்குமூலம் எல்லாமே ஒரே மாதிரியாக இருக்கிறது. அதையெல்லாம் படித்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” எனக் கூறி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி சம்பந்தத்தை படிக்க வைத்தார். இறுதியில் ஜெயலலிதாவின் பையனூர், சிறுதாவூர் மற்றும் கொடைக்கானல் சொத்துகளை மறுமதிப்பீடு செய்ய நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார்.