செய்திகள்

ஜெயலலிதா ஆட்சி ஊழல்கள் சான்றுகளுடன் வெளிவர தொடங்கியுள்ளது! கருணாநிதி சாடல்

அ.தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் ஊழல் மண்டிக்கிடக்கிறது. அந்த ஊழல்கள் சான்றுகளுடன் வெளிவர தொடங்கி இருக்கிறது என்று கருணாநிதி குற்றஞ்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மிகப்பெரிய செலவினத்தை கொண்டிருப்பது பொதுப்பணித்துறை. அந்த துறையின் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து 35 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை கமிஷனாக ஆளுங்கட்சி தரப்பினரால் உயர் மட்டத்தில் இருந்து அடி மட்டம் வரை அவரவர் பங்குக்கு வாங்கப்படுகிறது என்று புகார் கூறப்பட்டும், எழுதப்பட்டும் வந்தது.

ஆனால், அந்த செய்தியை உறுதிப்படுத்துகின்ற வகையில் எழிலகம் வாசலில், பொதுப்பணித்துறை பொறியியல் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் சார்பிலேயே, “மாபெரும் ஊழல் செய்த முதல் பொறியாளர் யார்?” என்று டிஜிட்டல் பேனர் வைக்கப்படுகிறது என்றால் இதைவிட வேறு எந்த அவமானமாவது அல்லது தலைகுனிவாவது இந்த ஆட்சிக்கு தேவையா? இதுமாத்திரமல்ல; பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் ஒருவரும், பொதுப்பணித்துறையில் பணியாற்றும் ஒரு அதிகாரியும் கொடுக்கல்-வாங்கல் பற்றி தொலைபேசியில் பேசுகின்ற பேச்சும் “வாட்ஸ்-அப்” மூலமாக அப்படியே வெளிவந்து கலக்கியுள்ளது.

1

லஞ்சப்பணத்தில் ஒரு சில அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்கள் என்றால், அந்த அதிகாரிகள் யார்? பராமரிப்பு செலவுக்காக அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட பணம் செலவிடப்பட்டதாக அதிகாரிகள் கூறிய போதிலும், அந்த பணிகள் முறையாகவோ, முழுமையாகவோ எங்கும் நடக்கவில்லை என்று ஒப்பந்ததாரர்களின் சங்கத்தினரே தெரிவிக்கிறார்கள் என்றால், மக்கள் தந்த வரிப்பணம் எப்படியெல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில் விரயமாகியுள்ளது என்பதை புரிந்துகொள்ள இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்?.

ஆனால், இவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் அரசு தரப்பிலே ஈடுபட்டு, இந்த ஒப்பந்ததாரர்களை அழைத்து கட்டிடங்கள் பிரிவிலே உள்ள முக்கிய அதிகாரி ஒருவர் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னையைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்றெல்லாம் அமைதிப்படுத்தி மூடி மறைத்திட முயன்றிருக்கிறார். அ.தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் இதுபோன்ற ஊழல்தான் மண்டிக்கிடக்கிறது. ஆனால், இப்போதுதான் வெளிப்படையான சான்றுகளுடன் வெளிவரத் தொடங்கியுள்ளது. அமைச்சர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள்? ஆட்சி இன்னும் ஓராண்டுதான்; அதற்குள் முடிந்த வரை சுரண்டி லாபம் என்ற அளவில்தானே பணி யாற்றுகிறார்கள். அமைச்சர்கள் இப்போது ஆற்றுகின்ற பணி எல்லாம் ஒவ்வொரு கோவிலாக சென்று யாகம் என்றும், தேர் இழுப்பது என்றும், தீ மிதிப்பது என்றும் வேண்டுதலிலேதான் ஈடுபட்டுள்ளார்கள்.

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதாவின் விடுதலைக்காக அவற்றையெல்லாம் செய்வதாக அவர்கள் கூறிக்கொண்டாலும், உண்மையிலே விசாரித்தால் ஒவ்வொருவரும் தங்களின் அமைச்சர் பதவி போய்விடக் கூடாது, தாங்கள் எதிலும் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் அந்தக் கோவில் திருப்பணிகளிலே ஈடுபடுகிறார்களாம்.

ஜெயலலிதாவின் விடுதலைக்காக அந்த பணிகளைச் செய்வதாக கூறிக்கொண்டு நடத்தப்படுகின்ற பூஜை, புனருத் தாரணங்களில் எத்தனை கலெக்டர்கள் கலந்துகொள்கிறார்கள்? அவர்கள் எல்லாம் யார்? ஐ.ஏ.எஸ். அதிகாரிகளா? அல்லது ஆளுங்கட்சியின் எடுபிடிகளா? அவர்கள் மீதெல்லாம் தலைமைச் செயலாளரோ, ஆளுனரோ இதுவரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? இன்றைக்கு வேண்டுமானால் இந்த அதிகாரிகள் தப்பித்துக்கொள்ளலாம், ஆனால் வருங்காலத்தில் இவர்கள் எல்லாம் விசாரணை கமிஷன் முன்னால் நின்று பதில் சொல்ல வேண்டிய நிலைமை நிச்சயம் உருவாகும்.

எழிலகம் வாசலில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருக்கின்ற செய்தி கிடைத்ததும், உடனடியாக காவல் துறை அங்கே வந்து, அந்தப் பேனரை அகற்றுகின்ற முயற்சியிலே ஈடுபட்டுள்ளது. அதை மட்டும் அகற்ற சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், காவல் துறையினர் அந்தப் பகுதியிலே உள்ள அனைத்து பேனர்களையும் அகற்றுவதாகக் கூறி அந்தப் பேனரை அகற்ற முனைந்திருக்கிறார்கள். ஆனால், இப்படியெல்லாம் செய்து இந்த ஆட்சியினரின் ஊழல்களைத் திரை போட்டு மறைக்க காவல் துறையினராலும் முடியாது; காவல் துறையினருக்குத் தலைமை தாங்கி, அ.தி.மு.க. ‪ஆட்சியைத் தாங்கிக் காப்பாற்றுகின்ற முயற்சியிலே ஈடுபட்டுள்ள காவல் துறையின் ஆலோசகராலும் முடியாது. சிலரை பல நாள் ஏமாற்றலாம்; பலரை சில நாள் ஏமாற்றலாம்; ஆனால் எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது.

அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல்கள் பற்றிய உண்மைகள் அனைத்தையும் மக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். இனியும் அவர்களை “செய்வீர்களா? செய்வீர்களா?” என்று கேட்டுத் திசை திருப்ப முடியாது” என்று கூறியுள்ளார்.