செய்திகள்

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீன் நீட்டிப்பு; மே 12 வரை தீர்ப்பு வழங்க தடை

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் வழங்கப்பட்டிருந்த ஜாமீனை மே மாதம் 12 ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஏற்கனவே ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி உச்சநீதிமன்றம் 2 மாதம் ஜாமீன் வழங்கியிருந்தது. 2 மாதம் முடிந்ததும் மீண்டும் டிசம்பர் 18ம் தேதியிலிருந்து 4 மாத காலம் ஜாமீன் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் டிசம்பர் 18 ல் வழங்கப்பட்ட ஜாமீன் இன்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் ஜாமீனை நீட்டிக்க கோரிய மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எச்.எல்.தத்து , நீதிபதி மிஸ்ரா தலைமையிலான அமர்வு, மே 12 ஆம் தேதி வரை 4 பேருக்கும் ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டது.

மே 12 வரை தீர்ப்பு வழங்க தடை

மேலும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் மே 12 ஆம் தேதி வரை தீர்ப்பு வழங்க வேண்டாம் என்றும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமார சாமிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்புக்கு அவகாசம் கோரிய கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி

முன்னதாக ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக் கோரி திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேற்று முன்தினம் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து, 3 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு வழங்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு விதித்த தடையை நீட்டிப்பதாக நீதிபதிகள் ஏதும் கூறவில்லை. எனவே கர்நாடக நீதிமன்றத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை விலக்கிக் கொள்ளப்பட்டதாகவே கருதப்பட்டது. இதனால் தீர்ப்பு எந்த நேரத்திலும் அளிக்கப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை வழங்க, கூடுதல் அவகாசம் தருமாறு வலியுறுத்தி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹச்.எல்.தத்துவுக்கு, கர்நாடகா சிறப்பு நீதிமன்ற நீதிபதி குமாரசாமி கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தில், மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை வழங்க ஏப்ரல் 15ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி குமாரசாமி, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தீர்ப்பு வழங்க இயலாததால், ஏப்ரல் 30ஆம் தேதிவரை அவகாசம் வழங்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.