செய்திகள்

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு மேல்முறையீட்டுக்கு தகுதியானது! கர்நாடக அரசுக்கு ஆச்சார்யா பரிந்துரை

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுவித்த கர்நாடக உயர் நீதிமன் றத்தின் தீர்ப்பு மேல்முறையீட்டுக்கு தகுதியானது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா அதிகாரப்பூர்வமாக பரிந்துரை செய்துள்ளார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நால்வருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து நான்கு பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதனை விசாரித்த நீதிபதி குமாரசாமி நால்வரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பில் ஜெயலலிதா தரப்பில் பெற்ற கடன்களை கணக்கிட்டதில் கூட்டுத்தொகை பிழையாகி இருக்கிறது. அதனை சரியாக கணக்கிட்டு இருந்தால் நால்வரையும் வழக்கில் இருந்து விடுவித்து இருக்க முடியாது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதுதொடர்பாக விளக்க மளித்த கர்நாடக முதல்வர் சித்தரா மையா, ஜெயலலிதா தீர்ப்பு தொடர் பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து கர்நாடக சட்டத் துறை செயலர் சங்கப்பா, ஜெயலலிதா வழக்கில் வெளியாகி யுள்ள தீர்ப்பு குறித்து விளக்கம் அளிக்கும்படி அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு கடிதம் எழுதினார்.

ஆச்சார்யாவின் கடிதம்

இதற்கு பதில் அளித்து அரசு வழ‌க்கறிஞர் ஆச்சார்யா க‌ர்நாடக சட்டத் துறை செயலர் சங்கப்பா, தலைமைச் செயலர் கவுசிக் முகர்ஜி மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் ரவி வர்ம குமார் ஆகியோருக்கு நேற்று அதிகாரப்பூர்வ பரிந்துரை கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தின் சாரம்சம் வருமாறு:

”ஜெயலலிதா மீதான மேல் முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பல அடிப்படை தவறுகள் இருக்கின்றன.குறிப்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாங்கிய கடன், கட்டிட மதிப்பீடு, சுதாகரனின் திருமண செலவுகள் ஆகியவற்றை நீதிபதி குமாரசாமி ஏற்றுக்கொண்ட விதம் சட்டத்துக்கு எதிராக இருக்கிறது.

இவ்வழக்கில் கூட்டுச்சதி, பினாமி சட்டத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. அதனை ரத்து செய்தது தொடர்பாக நீதிபதி குமாரசாமி போதிய விளக்கம் அளிக்கவில்லை. எனவே கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மேல்முறையீட்டு தகுதியானது. தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக‌ ஆச்சார்யா விடம் கேட்ட போது,” இந்த விவகாரத்தில் கர்நாடக அரசுதான் முடிவெடுக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டால் ஜெயலலிதாவுக்கு எதிராக வாதிட தயாராக இருக்கிறேன்” என்றார்.

இது தொடர்பாக ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கர்நாடக அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.