செய்திகள்

மாற்றமடையும் தமிழக அரசியல் சமன்பாடு: ஜெயலலிதா மீண்டும் முதல்வராவார்

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பில் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பில் ஜெயலலிதா இன்று விடுதலை செய்யப்பட்டதையடுத்து , தமிழ்நாட்டின் முதலமைச்சராக அவர் சில நாட்களில் மீண்டும் பதவியேற்கவிருக்கிறார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா, அந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா உட்பட நான்கு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து தனது தமிழக முதல்வர் மற்றும் ஸ்ரீரங்கம் சட்டசபை உறுப்பினர் பதவியை ஜெயலலிதா இழந்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜெயலலிதா மீண்டும் முதல்வராக இருக்கிறார்.

எதிர்வரும் 17ம் தேதி அவர் மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வதற்கு முன்னர் ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்று விடுவார் எனக் கூறப்படுகிறது.

எம்எல்ஏக்கள் கூடி அவரை முதல்வராக தேர்வு செய்வர். அதனைத் தொடர்ந்து அடுத்த 6 மாதத்தில் அவர் தேர்தலை எதிர்கொண்டு எம்எல்ஏவாக அவகாசம் உள்ளது. ஆனால், தான் மட்டும் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் எம்எல்ஏ ஆவதற்கு பதிலாக, இந்தத் தீர்ப்பின் மூலம் கிடைத்துள்ள அரசியல் லாபத்தை வைத்து சட்டமன்றத் தேர்தலையே ஜெயலலிதா நடத்திவிடக்கூடும் என்று சிலர் கூறுகின்றனர்.

இந்நிலையில் தீர்ப்பை தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் அனைவரும் போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா இல்லம் முன்பு கூடி உள்ளனர்.