செய்திகள்

ஜெயலலிதா வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வது என்று கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

பெங்களூருவில் இன்று நடைபெற்ற கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் விடுதலை அளிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதமும் ரத்து செய்யப்பட்டது.

இந்த தீர்ப்பில் கணக்கு பிழை இருப்பதாக கூறி, தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று திமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே, மேல்முறையீடு குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீடு செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது மிகவும் முக்கியமான வழக்கு என்பதால் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கமாட்டோம் எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார், கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயசந்திராவுக்கு அண்மையில் பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

இருப்பினும் எந்த தேதியில் மேல்முறையீடு செய்வது என்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என கர்நாடக சட்டத் துறை அமைச்சர் ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா, அதிமுகவினர் அதிர்ச்சி

கர்நாடக அரசின் இந்த முடிவு ஜெயலலிதா மற்றும் அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு?

மேலும் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனதை தொடர்ந்து அவர் போட்டியிட உள்ள ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் கர்நாடக அரசின் முடிவு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக அரசின் மேல்முறையீட்டு முடிவு, ஜெயலலிதாவுக்கு எதிரான பிரசாரத்திற்கு கிடைத்த வாய்ப்பு என்ற எண்ணத்தில், இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற தங்களது முடிவை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாற்றிக்கொண்டு, போட்டியிடுவதாக அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது.

திமுக, ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் வரவேற்பு

இந்நிலையில் கர்நாடக அரசின் மேல்முறையீட்டு முடிவை வரவேற்பதாக திமுக தெரிவித்துள்ளது. திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் இதுகுறித்து கூறுகையில், இவ்வழக்கில் எழுத்துப்பூர்வமாக வாதாட திமுகவுக்கு உரிமை உள்ளதாகவும், தேவைப்படும்போது திமுக அதனை பயன்படுத்தும் என்றும் கூறி உள்ளார். அதேப்போன்று , தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் வரவேற்றுள்ளார்.

சரியான முடிவு: ஆச்சார்யா

மேலும் கர்நாடக அரசு சரியான முடிவை எடுத்துள்ளதாக இவ்வழக்கில் கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜரான ஆச்சார்யா கருத்து தெரிவித்துள்ளார்.கர்நாடக அரசு சட்டரீதியான முடிவை எடுத்துள்ளதாகவும், கர்நாடக அரசு கேட்டுக்கொண்டால் இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராவேன் என்றும் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

முடிவின் பின்னணியில் அரசியல்: நாஞ்சில் சம்பத்

இந்நிலையி்ல் கர்நாடக அரசின் இந்த முடிவின் பின்னணியில் அரசியல் உள்ளதாகவும், ஜெயலலிதாவை வேதனைக்குள்ளாக்க வேண்டும் என திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவு இது என்றும், இவ்வழக்கில் நியாயம் நிச்சயம் வெல்லும் என்றும், நீதியையும் நிலைநாட்டுவோம் என்றும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

வழக்கு கடந்து வந்த பாதை

கடந்த 18 ஆண்டுகளாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா மற்றும் இளவரசி,சுதாகரன் ஆகியோர் மீது வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கர்நாடக மாநில கீழமை நீதிமன்றம் இது தொடர்பாக தீர்ப்பளித்தது. நீதிபதி டி.குன்ஹா அளித்த அந்தத் தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் சிறைத் தண்டனை மற்றும் நூறுகோடி அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதியே முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.அவருடன் சசிகலா,இளவரசி,மற்றும் சுதாகரன் ஆகியோரும் சிறை வாசம் அனுபவித்தனர். பின்னர் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா 219 நாட்கள் தனது போயஸ் தோட்ட இல்லத்திலேயே முடங்கிக் கிடந்தார். அவருக்குப் பதிலாக அந்த நேரத்தில் தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவி ஏற்று தமிழக அரசை நடத்தி வந்தார். ஆனால் பல்வேறு முறைகேடுகள் பன்னீர்செல்வம் ஆட்சியில் நிறைந்து விட்டதாக புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர்நீதி மன்றம்,ஜெயலலிதா உள்ளிட்டோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்க்கவில்லை என்று கூறி 4 போரையும் கடந்த மாதம் 11 ஆம் தேதி விடுவித்தது. இதனால் மீண்டும் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றார். ஜெயலலிதா மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வசதியாக அதிமுகவின் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ. வாக இருந்த வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து தேர்தல் ஆணையம் வரும் 27 ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும் என்று அறிவித்து அதற்கான பணிகளை விரைவுப் படுத்தியது.

இந்நிலையில் இன்று கர்நாடக அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக முடிவு செய்து அது தொடர்பான அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இந்த முடிவு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பினை உண்டக்கியுள்ளதோடு மீண்டும் அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்துமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.