செய்திகள்

ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு எதிரொலி: கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தை சுற்றி 144 தடை அமுல்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. 45 நாட்களில் விசாரணையை முடித்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, கடந்த மார்ச் 11ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு மே 11ஆம் தேதி (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என்று கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் பி.ஏ.பாட்டீல் நேற்று தெரிவித்தார்.

இதனிடையே, ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பெங்களூருவில் உள்ள ஹோட்டல்களில் அறைகளை முன் பதிவு செய்தனர். மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளும் கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தில் வலம் வந்த வண்ணம் உள்ளனர். தற்போது, தீர்ப்பு தேதி உறுதி செய்யப்பட்டதால், பெங்களூருவில் உள்ள ஹோட்டல்களின் அறைகள் மிகத் தீவிரமாக முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பெங்களூரு காவல்துறை ஆணையர் எம்.என்.ரெட்டி இன்று பிறப்பித்துள்ளார்.

ஏற்கனவே பெங்களூரு தனி நீதிமன்றத்தில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் முன்பு நீதிமன்ற வளாகத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.