செய்திகள்

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சுப்பிரமணியன் சாமி

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி
தெரிவித்து உள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவரின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி குமாரசாமி விசாரித்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பை அறிவித்த நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதாவுக்கு தனி நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து அவரை விடுதலை செய்வதாக அறிவித்தார். இதேபோல் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டதை ரத்து செய்து அவர்கள் 4 பேரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார்.

இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

“உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் கணக்கீடு செய்ததில் தவறு உள்ளது என்பதை நிரூபிப்பேன். ஜெயலலிதா முதல்வர் ஆனால் மீண்டும் அந்தப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியது இருக்கும்”என்று சுப்பிரமணியசாமி பதிவிட்டுள்ளார்.

நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சுப்பிரமணியசாமி,” இந்த தீர்ப்பு எனக்கு மிகவும் ஆச்சரியம் அளிக்கிறது. இப்படி முற்றிலுமாக விடுதலை என்று அறிவிப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இப்படி தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கவில்லை. தீர்ப்பை முழுக்க படித்த பிறகே அது பற்றி கூறமுடியும்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது பற்றி, புதிதாக நியமிக்கப்பட்டு இருக்கும் அரசு வக்கீல்தான் தீர்மானிக்க வேண்டும். அதற்கு பிறகுதான் புகார் தாரர் என்ற முறையில் எனக்கு வாய்ப்பு அளிக்கப்படும். ஒருவேளை கர்நாடக அரசு அப்பீலுக்கு போகவில்லை என்றால் நான் கண்டிப்பாக அப்பீல் செய்வேன். இந்த தீர்ப்பு நாடு தழுவிய அளவில் நடைபெறும் ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு ஒருவகையான சிக்கலை உருவாக்கி உள்ளது” என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.