செய்திகள்

ஜெயலலிதா விடுதலை: நீதிமன்றமே இப்போது கேள்விக்குறியாகியுள்ளது! – இல.கணேசன் கருத்து

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின் விடுதலை குறித்து ஊடகங்களில் வரும் செய்திகள் உண்மையாக இருக்குமானால், நீதி மன்றமே இப்போது கேள்விக் குறியாகியுள்ளது என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.

தஞ்சையில் நேற்று அவர் அளித்த பேட்டி: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப் பட்டதில் பாஜகவுக்கு தொடர்பு உள்ளதாக நினைத்து, நாட்டின் நீதித்துறையை குற்றஞ்சாட்டுகின்ற னர். இதற்கு முன்பு தண்டனை வழங்கியபோதும் மோடிதான் பிரதமராக இருந்தார். நீதிமன்றத் தின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்.

ஆனால், தற்போது பிரச்சினை வேறாக இருக்கிறது. அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் நியமனம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்து, நீதிமன்றம் குறித்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஆச்சார்யா போன்ற மூத்த வழக்கறிஞர்கள், கணக்கீடு செய்தலில் தவறு உள்ளது என்று பகிரங்கமாக சொல்லியுள்ளதால், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகூட அதை ஏற்றுக்கொண்டு அதை எப்படி சரிசெய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் என்று ஊடகத்தில் வரும் செய்திகள் உண்மையாக இருக்குமானால், நீதிமன்றமே இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.

சுப்பிரமணியன் சுவாமி இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப் போவதாகச் சொல்லும் கருத்து, பாஜகவின் கருத்து அல்ல.

எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு

மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, அதிகமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதற்கு பாஜகவின் அணுகுமுறையும், எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புமே காரணம்.

குழந்தைகள் பணியில் ஈடுபடுவதை பாஜக அரசு எதிர்க்கிறது. குறிப்பாக, ஆபத்தான தொழில்களான பட்டாசு, தீப்பெட்டி தயாரித்தல் தொழில்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவதை தண்டனைக்குரிய குற்றமாகவே கருதுகிறது. ஆனால், பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்கள் தங்களின் வீடுகளில் பெற்றோர் செய்யும் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், சிலர் இதை குலக் கல்வித் திட்டம் என்று திசை திருப்புகின்றனர்.

நிலம் கையகப்படுத்துதல் மசோதா குறித்து தவறான பிரச்சாரத்தை, திட்டமிட்டு எதிர்க்கட்சிகள் செய்து வருகின்றன. வரும் செப்டம்பர் மாதம் முதல், இந்த மசோதாவைப் பற்றி மக்கள் சந்திப்பு பிரச்சாரம் மூலம் தெளிவுபடுத்த முடிவு செய்துள்ளோம்.

எவ்வளவு விரைவாக நதிகள் இணைக்கப்படுகிறதோ, அவ்வளவு விரைவாக தஞ்சை விவசாயிகள் காப்பாற்றப்படுவர். இதுதான் நிரந்தர தீர்வு” என்றார் கணேசன்.