செய்திகள்

ஜெனீவாவில் காத்திருக்கும் நெருக்கடி: மனித உரிமைகள் ஆணையாளரை சந்திக்கிறார் தனபால

ஜெனீவாவில் மார்ச் மாதத்தில் இலங்கை எதிர்கொள்ளவிருக்கும் நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிரேஷ்ட வெளிவிவகார ஆலோசகரான ஜயந்த தனபால, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் ஹ¥சைனை ஜெனீவாவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

போர்க்குற்றம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்னெடுத்திருக்கும் விசாரணைகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக அரசாங்கத்தின் விசேட தூதுவரான தனபால இன்று திங்கட்கிழமை ஜெனீவா செல்கிறார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி கோரியபோதும் கடந்த அரசாங்கம் இலங்கைக்குள் வருவதற்கு அனுமதி மறுத்திருந்தது.

இந்த விசாரணைக்குழு எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ள நிலையிலேயே இலங்கை அரசாங்கத்தின் விசேட தூதுவராக ஜயந்த தனபால ஐ.நா. செல்கிறார். இதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஜயந்த தனபாலவிடம் தாம் கோரிக்கை விடுத்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளே மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறியிருக்கும் அவர், இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளை மேற்கொள்வதற்கு நாட்டுக்குள் அனுமதிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து இதுவரை எந்தவிதமான கோரிக்கைகளும் தம்மிடம் விடுக்கப்படவில்லையென்றும், பேச்சுவார்த்தைகளை முடித்துக்கொண்டு தனபால நாடு திரும்பியதும் புதிய அணுகுமுறை குறித்து தீர்மானிக்க முடியும் என்றும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாகவே இலங்கைக்கு எதிராக இவ்வாறானதொரு விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. சரியான முறையில் இவ்விடயத்தைக் கையாண்டிருந்தால் இதனைத் தவிர்த்திருக்க முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.