செய்திகள்

ஜெ. சிறை செல்வவது உறுதி: விஜயகாந்தின் உரையால் சர்ச்சை

சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிறைக்கு செல்வது உறுதி என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். அவரது இந்த உரை தமிழக அரசியலில் புதிய சர்ச்சை ஒன்றை ஏற்படுத்தியிருக்கின்றது.

தே.மு.தி.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கோவையில் நேற்று நடந்தது.  இதில் கலந்து கொண்டு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்  பேசுகையில் மேலும் தெரிவித்ததாவது:

“மக்களை சந்திக்காமல் வீட்டுக்குள் இருக்கும் ஜெயலலிதாவை மக்கள் முதல்வர் என சொல்வதை எப்படி ஏற்க முடியும். தொடர்ந்து ஜெயலலிதாவை கடுமையாக விமர்சிப்பேன்.

ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் குன்ஹா கொடுத்த தீர்ப்பை யாராலும் மாற்ற முடியாது. மே மாதத்துக்கு பின்பு ஜெயலலிதா சிறைக்கு செல்வது உறுதி.

லஞ்சம், ஊழலில் மட்டுமே தொலைநோக்கு பார்வையுடன் இந்த அரசு செயல்படுகிறது. மாவட்டம் தோறும் தொழிற்கல்வி ஆரம்பிக்க போவதாக தெரிவித்தார்கள். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை” என்றார்.