செய்திகள்

ஜேர்மனியிலும் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்

பிரான்ஸ் நாட்டைத் தொடர்ந்து ஜெர்மனியில் உள்ள ‘ஹேம்பர்கர் மார்கென்போஸ்ட்’ என்ற பத்திரிகை அலுவலகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் போலீஸார் இரண்டு பேரை கைது செய்தனர்.

‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகையில் வெளியான கார்ட்டூனை மறு பிரசுரம் செய்ததற்காக இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அண்மையில், ப்ரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பகடிக்கு பெயர்போன இந்தப் பத்திரிகையில் வெளியான கார்ட்டூனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பத்திரிகை ஆசிரியர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகையில் வெளியான கார்ட்டூனை மறு பிரசுரம் செய்ததற்காக ஜெர்மனியின் ‘ஹேம்பர்கர் மார்கென்போஸ்ட்’ பத்திரிகை அலுவலகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் அலுவலகத்தில் இருந்த முக்கிய கோப்புகள் தீக்கிரையாகின.

இது சம்பந்தமாக ‘ஹேம்பர்கர் மார்கென்போஸ்ட்’ தனது இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில், “சம்பவம் நடந்தபோது அலுவலகத்தில் யாரும் இல்லை. அதனால் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. சார்லி ஹெப்டோ கார்ட்டூன் படத்தை வெளியிட்டதால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்லி ஹெப்டோ கார்ட்டூன் படத்தை தாக்குதலுக்கு உள்ளான பத்திரிகை மட்டுமல்லாமல் ஜெர்மனியில் இருந்து வெளியாகும் பெரும்பாலான பத்திரிகைகளும் மறு பிரசுரம் செய்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது.