செய்திகள்

ஜோதிடர்களின் தொழில்சார் வல்லமையை விருத்தி செய்ய அரசாங்கம் உதவி: மகிந்த வாக்குறுதி

இலங்கையிலுள்ள ஜோதிடர்கள் தங்களுடைய தொழில்சார் வல்லமையை விருத்தி செய்துகொள்வதற்கு வசதியாக அவர்களுக்கு கணனி உட்பட தொழில்நுட்ப வசதிகளைச் செய்து தருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ வாக்குறுதியளித்திருக்கின்றார்.

கொழும்பில் ஜோதிடர்களைச் சந்தித்து உரையாடியபோதே ஜனாதிபதி இந்த வாக்குறுதியை வழங்கினார். நாராஹேன்பிட்டி சாளிகா மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஜோதிடர்களின் சந்திப்பில் பல நூற்றுக்கணக்கான ஜோதிடர்கள் நாடு முழுவதிலுமிருந்து கலந்துகொண்டிருந்தார்கள்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் ஜோதிடத்தில் அதிகளவு நம்பிக்கை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, ஜோதிடர்கள் தொழில் ரீதியாக முன்னேற்றமடைய வேண்டும் எனவும், அதற்காக கணினி போன்ற தொழிநுட்ப வசதிகளை அவர்கள் பயன்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டதுடன், அதற்கான நிதி உதவிகளை தனது அரசாங்கம் மீண்டும் பதவிக்கு வரும் போது வழங்கும் எனவும் தெரிவித்தார்.

ஜோதிடர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்த ஜனாதிபதி, அவர்களுடன் நட்புறவுடன் உரையாடியதாக ஜனாதிபதி செயலக செய்திகள் தெரிவிக்கின்றன.