செய்திகள்

ஜோன் கெரியிடம் விக்னேஸ்வரன் கையளித்த 3 ஆவணங்கள்

இலங்கையின் வடமாகாண நிலைமைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்த விபரங்கள் அடங்கிய மூன்று ஆவணங்களை வடமாகாண முதலமைச்சர் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜோன் கெரியிடம் நேற்று கையளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த அமைரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஜோன் கெரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார். இதில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் கலந்துகொண்டிருந்தார்.

இந்தச் சந்திப்பின்போதே விக்னேஸ்வரன் மூன்று ஆவணங்களை ஜோன் கெரியின் கவனத்துக்குக் கொடுத்துள்ளதாகத் தெரிகின்றது. வடமாகாண சபை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய ஆவணம், இனஅழிப்பு குறித்து வடமாகாண சபை நிறைவேற்றிய பிரேரணையின் பிரதி என்பவற்றுடன் கடிதம் ஒன்றையும் விக்னேஸ்வரன் கையளித்தார்.

இவற்றைப் பெற்றுக்கொண்ட ஜோன் கெரி, ‘எங்களுக்கு Home Work தந்துள்ளீர்கள் போல” என நகைச்சுவையாக சிரித்துக்கொண்டே கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த முதலமைச்சர், “ஆம் நாம் எமது Home work ஐ முடித்துவிட்டோம். இப்போது உங்களுக்குத் தந்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இதேவேளையில் நேற்றைய சந்திப்பின்போது அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு ஒரு புறமாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு மறுபக்கமாகவும் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் விக்னேஸ்வரனுக்கு அமெரிக்க பிரதிநிதிகளின் பக்கமாகவே ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.