செய்திகள்

ஜோன் கெரி இன்று இந்தியா வருகின்றார் மோடியுடன் பேச்சு

குஜராத் மாநிலத்துக்கு முதலீட்டை ஈர்ப்பது தொடர்பாக நடைபெறவுள்ள “எழுச்சிமிகு குஜராத்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி இந்தியாவுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடியை நாளை திங்கள்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள அவர், பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கிறார்.

இதுதொடர்பாக வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பானர் ஜென் சாகி, பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:

“குஜராத் மாநிலம் காந்திநகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறவுள்ள மாநாட்டில், ஜான் கெர்ரி கலந்து கொண்டு முதலீட்டாளர்களிடையே பேசவுள்ளார். இதற்காக இந்தியாவுக்கு ஜான் கெர்ரி சனிக்கிழமை புறப்பட்டார்.

இந்தியா வரும் வழியில், ஜெர்மனியின் முனிச் நகரில் சிகிச்சை பெற்று வரும் ஏமன் நாட்டு மன்னர் குவாபூûஸ சந்தித்துப் பேசுகிறார்.

அதைத் தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்டு ஆமதாபாதுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன.11) வருகிறார். அவருடன், அமெரிக்க உயர்நிலைக் குழு ஒன்றும் ஆமதாபாத் வருகிறது.

ஆமதாபாத் வரும் ஜான் கெர்ரி, மகாத்மா காந்தியின் ஆசிரமத்துக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவர், இந்தியாவைச் சேர்ந்த முக்கியப் பிரதிநிதிகளை சந்திப்பதுடன் புதிதாக திறக்கப்படவுள்ள ஃபோர்டு கார் நிறுவனத்தின் ஆலைக்கும் சென்று பார்வையிடவுள்ளார்.

பிறகு, “எழுச்சிமிகு குஜராத்’ மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன்பின்னர், இந்திய தொழில் நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.

தைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை சந்திக்கும் ஜான் கெர்ரி, இரு தரப்பு விவகாரங்கள் குறித்தும், பருவநிலை மாற்ற விவகாரம் உள்ளிட்ட உலக விவகாரங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தகம் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இதை 5 மடங்கு அதிகரிப்பது குறித்தும் இரு தலைவர்களும் பேச்சுவார்ததை நடத்தவுள்ளனர்.

குஜராத்தில் நடைபெறவுள்ள மாநாடானது, இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தகத் தொடர்பை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கு கிடைத்த உண்மையான வாய்ப்பு ஆகும்.

இதனால், இரு நாடுகளின் அரசுகளுக்கு இடையே மட்டுமல்லாமல், இரு நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்களிடையேயும் நட்புறவு அதிகரிக்கும் என்றார் சாகி.