செய்திகள்

ஞானசார தேரர் பிணையில் விடுதலை!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவர் 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 10 லட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டதோடு வழக்கு ஜூலை 13ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறுந்துவத்தை பொலிஸாரால் கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் ஞானசார தேரர் இன்று ஆஜர் செய்யப்பட்ட போது பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன் ஆர்ப்பாட்டம் செய்ய நீதிமன்றம் தடை விதித்திருந்த போதும் அதனை மீறி ஆர்ப்பாட்டம் செய்த 27 பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்க்பட்டது.

அதன்படி 26 பேர் நீதிமன்றில் ஆஜரான நிலையில் ஞானசார தேரர் மாத்திரம் வெளிநாடு சென்றுவிட்டார். இதனால் ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் இன்று நாடு திரும்பிய ஞானசார தேரர் குறுந்துவத்தை பொலிஸ் நிலையத்தில் சென்று சரணடைந்த பின் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.