செய்திகள்

டக்ளஸ், கே.பி.யின் பாதுகாப்பை தொடருமாறு மைத்திரியை வலியுறுத்திய மகிந்த ராஜபக்‌ஷ

ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. எனப்படும் கே.பத்மநாதன் ஆகியோருக்கான பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரியவந்திருக்கின்றது.

சபாநாயகரின் இல்லத்தில் இருவருக்கும் இடையிலான நேரடியான பேச்சுவார்த்தை ஒன்று சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பையடுத்தே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதற்கு மகிந்த ராஜபக்‌ஷ இணக்கம் தெரிவித்தார். இருவரும் நேருக்கு நேராக சில மணி நேரம் இந்தச் சந்திப்பின்போது பேசிக்கொண்டார்கள்.

கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகுவது தொடர்பாகப் பேசியபோதே சில கோரிக்கைகளை மகிந்த ராஜபக்‌ஷ முன்வைத்ததாக இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

தன்னுடைய குடும்பத்தவர்கள் விசாரணைக்குள்ளாக்கப்படக்கூடாது என்பது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்த மகிந்த ராஜபக்‌ஷ, டக்ளஸ் தேவானந்தா மற்றும் கே.பி.யின் பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்பட வேண்டும் எனக் கோரினார்.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்துகொள்வதற்கு டக்ளஸ் தேவானந்தா முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், மைத்திரி தரப்பு அதற்கு இணங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதனையடுத்தே டக்ளஸின் பாதுகாப்பு குறிதது மைத்திரியிடம் மகிந்த வலியுறுத்தினார்.  இது தொடர்பில் மைத்திரி உறுதியான பதில் எதனையும் கூறியதாகத் தெரியவில்லை.

இதேவேளையில், கே.பி.யின் பாதுகாப்பு தொடர்பாகவும் மகிந்த ராஜபக்‌ஷ அதிகளவு அக்கறை காட்டினார். மலேசியாவில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் கே.பி. பின்னர் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டார். வன்னியில் அரச ஆதரவுடனான நிறுவனம் ஒன்றை அமைத்து சிறுவர்களைப் பராமரிக்கும் செஞ்சோலையை கேபி. நிர்வகித்துவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக அவருக்குத் தேவையான நிதி கிடைத்துவருவதுடன், இராணுவ உயர் அதிகாரிகள் சிலரை அவர் கிரமமாகச் சந்திப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளுக்கு நவீனரக ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்குப் பொறுப்பாக இருந்த அவரை எவ்வாறு சுயாதீனமாகச் செயற்படுவதற்கு அரச தரப்பு அனுமதித்தது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. கே.பி.யின் பாதுகாப்பு தொடர்பில் மகிந்த வலியுறுத்தியிருப்பதும் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றது.