செய்திகள்

டக்ளஸுடன் பேசுவதை தட்டிக்கழித்த ரணில்: இந்திய இல்லத்தில் சம்பவம்

முன்னாள் அமைச்சரும் ஈ.பி.டி.பி.யின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா கொழும்பில் இந்திய இல்லத்தில் இடம்பெற்ற இந்திய குடியரசு தின விருந்துபசாரத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசுவதற்கு பல தடவை முயன்ற போதிலும், ரணில் விக்கிரமசிங்க அதனைத் தவிர்த்துக்கொண்டதாக வைபவத்தில் நேரில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்திய குடியரசு தின வைபவத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருந்தார். முக்கிய அரசியல் பிரமுகர்களான சந்திரிகா குமாரதுங்க, நிமால் சிறிபால டி சில்வா, இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், வீ.ஆனந்தசங்கரி உட்பட அரசியல் முக்கியஸ்த்தர்கள், இராஜதந்திரிகள் பெருமளவுக்கு இதில் கலந்துகொண்டிருந்தனர்.

உத்தியோகப்பற்றற்ற முறையில் அரசியல் கலந்துரையாடல்கள் பலவும் இங்கு இடம்பெற்றது. முக்கிய புள்ளிகளான சந்திரிகா குமாரதுங்க மற்றும் ரணில் விக்கிரமசிங்கவைச் சுற்றியே அனைவரது கவனமும் இருந்தது. இதனைவிட இந்தியத் தூதுவர் சின்ஹாவும் அனைத்துப் பிரமுகர்களையும் அரவணைத்து உரையாடிக்கொண்டிருந்தார்.

இந்த நிகழ்வில் சந்திரிகா குமாரதுங்கவை அணுகி அவருடன் உரையாடிய டக்களஸ் தேவானந்தாவினால் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச முடியவில்லை. ரணிலுடன் பேசுவதற்கு பல தடவை அவரை டக்ளஸ் அணுகிய போதிலும், ரணில் முகம் கொடுக்காமல் தட்டிக்களித்துக்கொண்டதாகத் தெரிகின்றது.
002
இந்தியாவிலிருந்து கொழும்பு திரும்பி ஈ.பி.டி.பி.யை உருவாக்கி அரசியலில் ஈடுபடத் தொடங்கிய காலம் முதல் கடந்த இருபது வருடங்களாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த கட்சிகளுடன் இணைந்து அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொள்வதில் டக்ளஸ் தேவானந்தா வெற்றி பெற்றிருக்கின்றார். சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தில் 2000 ஆம் ஆண்டு முதல் முறை அமைச்சராக டக்ளஸ் நியமிக்கப்பட்டார். அன்றுமுதல் எந்த அரசாங்கம் வந்தாலும் அதற்கு ஆதரவைத் தெரிவித்து அமைச்சர் பதவியை அவர் பெற்றுக்கொண்டார்.

ஜனவரி 8 ஆம் திகதி தேர்தலில் மகிந்த ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த டக்ளஸ், மைத்திரி வெற்றி பெற்ற பின்னர் புதிய அரசுக்கு ஆதரவை வெளிப்படுத்தினார். அரசுடன் இணைந்து செயற்படும் விருப்பத்தையும் நம்பிக்கையானவர்கள் மூலம் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது. இருந்த போதிலும், அமைச்சரவையை அமைப்பதில் முக்கிய பங்காற்றிய ரணில் அதனை விரும்பவில்லை எனக் கூறப்படுகின்றது.

இந்தப் பின்னணியிலேயே ரணிலைச் சமாதானப்படுத்துவதற்கான முயற்சியை டக்ளஸ் மேற்கொண்டதாகக் கூறப்படுகின்றது.