செய்திகள்

டிரான் அலஸ் நாட்டைவிட்டு வெளியேறத் தடை: நீதிமன்றம் இன்று உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராதா என்ற நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒருவரான டிரான் அலஸ் உள்ளிட்ட ஐந்து பணிப்பாளர்களுக்கு இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோட்டே நீதிமன்ற நீதவான் இன்று இவ்வாறு தடை விதித்துள்ளது. சுனாமியால் பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைப்பது தொடர்பிலான பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டிருந்ததாகவும் அதில் பாரிய மோசடிகள் இடம்பெற்று உள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

டிரான் அலஸ் தலைமையில் இந்த ராதா நிறுவனம் 2006ம் ஆண்டு நிறுவப்பட்டது. சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட நிறுவனம், திறைசேரியிடமிருந்து 645 மில்லியன் பணம் பெற்றுக்கொண்டுள்ளது.

இதற்கு ஜனாதிபதி செயலகத்தின் அனுமதியும் கிடைக்கப்பெற்றிருந்தது என தெரிவிக்கப்படுகிறது. எனினும், வீடுகள் எதுவும் நிர்மானிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது.

ஓம்ஸ் டெக்ஸ்டைல் என்ற நிறுவனத்திற்கு இந்தப் பணம் வழங்கப்பட்டு உள்ளதாகவும் இதனை டிரான் அலஸ் மற்றும் புலி ஆதரவாளர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள எமில்காந்தன் ஆகியோர் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.