செய்திகள்

டுபாயிலிருந்து நாடு திரும்பிய இளைஞர் விமான நிலையத்தில் கைது! குடும்பத்தினர் மீதும் விசாரணை

டுபாயில் பணிபுரியும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் விடுமுறையில் நாடு திரும்பும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இதனையடுத்து மட்டக்களப்பிலுள்ள அவரது இல்லத்துக்கும் வென்ற புலனாய்வுப் பிரிவினர் அவரது குடும்பத்தினரையும் விசாரணைக்குள்ளாக்கியுள்ளனர்.

நேற்று முன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இச்சம்பவத்தினால், கொக்கட்டிச்சோலைப் பகுதியில் அச்சமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. மட்டக்கப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் குறிப்பிட்டதாவது:

“2009 மே 19 ஆம் திகதி அந்த போராட்டத்தை ஒடுக்கியதற்கு பிறகு , அல்லது அந்த போர் மௌனித்தற்கு பிறகு அப்போது இருந்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தெளிவாக கூறியது இப்போது உங்களுக்கு சமாதானம் வந்த விட்டது என்று.

தமிழ் தேசிய கூட்டமைப்பாகிய நாங்கள் சுதந்திரமாக கூட்டம் நடத்த முடியாது என்று இவ்வாறான அடக்குமுறையில் தான் கடந்த 5 வருடங்களாக காலத்தை கடத்தியிருந்தோம். ஆனால் ஒரு மாற்றும் வந்து இருக்கின்றது. எவ்வாறு என்றால் மழை பெய்தாலும் தூவானம் இன்னும் போகவில்லை என்று வகையில் தான் நாங்கள் இன்றும் இருந்து கொண்டு இருக்கின்றோம்.

தாமோதரம் பாஸ்கரன் என்ற இளைஞர் டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருக்கினறான். அவனை அங்கிருக்கின்ற புலனாய்வாளர்கள் தடுத்து கொண்டு சென்று இருக்கின்றார்கள். தடுத்து கொண்டு சென்றதற்கு பிற்பாடு கொக்கொட்டி சோலையில் இருக்கின்ற புலனாய்வு பகுதிற்கு சொல்லப்பட்டுள்ளது. அவரது வீட்டிற்கு சென்று விசாரணை செய்து அறிக்கை தருமாறு கூறியிருக்கினறார்கள்.

இப்போது விசாரணை நடந்து கொண்டுள்ளது.சமாதான் வந்து விட்டது , ஆட்சி மாறி விட்டது என்று கூறினாலும் தமிழர்களுக்கு எதிரான கெடிபிடிகள் அப்படியே தான் இருக்கின்றது.”

இவ்வாறு அரியநேத்திரன் தெரிவித்தார்.