செய்திகள்

டெங்கு காரணமாக காத்தான்குடியில் இரு தினங்களில் இருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கின் தாக்கம் காரணமாக இரு தினங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி யு.எல்.நசீர்தீன் தெரிவித்தார்.
நேற்று சனிக்கிழமை காலை 07வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்hர். காத்தான்குடி ஆறாம் குறிச்சி அப்துல் ஜவாத் ஆலிம் வீதியைச் சேர்ந்த   ஏ.ஸாயிதா ஸித்னா என்ற  சிறுமியே  இவ்வாறு உயிரிழந்தார்.
இவர் மீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுவருகின்றார். சில தினங்கள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த இந்தச் சிறுமி சனிக்கிழமை (06) மிகவும் சோர்வடைந்து காணப்பட்ட நிலையில், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையிலேயே இந்தச் சிறுமி உயிரிழந்தார்.
இதேபோன்று இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காத்தான்குடி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடியைச் சேர்ந்த எம்.எச்.சிபான் (வயது 26) எனும் இளைஞன் உயிரிழந்தார்.
இவர் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிந்து விட்டு விடுமுறையில் வீடு வந்த பின்னரே டெங்கு காய்ச்சல் எற்பட்டுள்ளது.
கடந்த 15 தினங்களுக்கு முன்னர் டெங்கு காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு; தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளார்.