செய்திகள்

டென்டுல்கர் காலம் போய் வீராட் கோலியின் காலம் தொடங்கி விட்டது: சேவாக் சொல்கிறார்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் வீராட் கோலி. 20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அரை சதம் அடித்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். தொடர்ந்து நிலையான ஆட்டத்தை கோலி வெளிபடுத்தி வருகிறார்.

அவரது ஆட்டத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கரின் சாயலை பார்க்கிறேன் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தெரிவித்து இருந்தார்.சச்சின் தெண்டுல்கர் விளையாடிய போது அவரது காலமாக பார்க்கப்பட்டது. அதுபோல் இப்போது வீராட் கோலி காலம் தொடங்கி விட்டது என்று இந்தியாவின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் பாராட்டி உள்ளார்.அவர் கூறியதாவது:–நான் நிச்சயமாக சொல்கிறேன்.

அடுத்த சச்சின் தெண்டுல்கராக வீராட் கோலி உருவெடுப்பார். நீங்கள் சிறந்த வீரர்களை பார்த்தால் ரன் சேசிங்கின் போது அவர்களது சராசரி அபாரமாக இருக்கும். அதில் வீராட் கோலி நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். அவர் ரன் வேட்கையில் உள்ளார். குறைவான ரன்னில் அவுட் ஆனால் டிரசிங் ரூமில் பேட்டை தூக்கி வீசுகிறார். இது அணியின் வெற்றிக்கு தனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதை காட்டுகிறது.

தெண்டுல்கரின் காலம் என்று சொன்னவர்கள் இப்போது வீராட் கோலி காலம் என சொல்ல தொடங்கி விட்டார்கள். தற்போது கோலியின் காலம் தொடங்கிவிட்டது.இவ்வாறு அவர் கூறினார்.சுனில் கவாஸ்கர் கூறும் போது, கடந்த ஆண்டே வீராட் கோலியின் சகாப்தம் ஆரம்பித்துவிட்டது. இப்போது இந்திய கிரிக்கெட்டில் தனக்கென இடத்தை பிடித்து இருக்கிறார் என்றார்.