செய்திகள்

டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் இணைவின் சாத்தியப்பாடு?

யதீந்திரா
சில தினங்களாக இப்படியொரு விடயம் நடந்துவிடாத என்னும் அவாவுடன் சிலர், சில முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்களுடனும் சிலர் பேசியிருக்கின்றனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவரும் நன்பர் ஒருவர் ஊடங்களின்; ஆதரவும் இதற்குத் தேவை என்றார். அதே வேளை மேற்படி மூன்று கட்சிகளும் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன என்பதை அறிவதில் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஆர்வம் கொண்டிருப்பதாகவும் ஒரு தகவல் உண்டு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் சொந்தத் திர்மானங்களில் இயங்கும் நிலைமை உருவாக்கியபோதுதான் அதற்குள் முரண்பாடுகளும் முளைகொண்டது. அதுவே பின்னர் மெது மெதுவாக வளர்ந்து, இரண்டு கட்சிகள் வெளியேறும் நிலைமையில் முடிந்தது. இதில் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் மிக அண்மையில் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய கட்சி. இந்த பின்புலத்தில் நோக்கினால் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போதிருந்த மூன்று கட்சிகள் தற்போது கூட்டமைப்புக்குள் இல்லை. 2010இல் கஜேந்திரகுமார் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெளியேறியது. 2013இல் இடம்பெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் மூத்த அரசியல் வாதியான ஆனந்தசங்கரியின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி வெளியேறியது. இறுதியாக ஈ.பி.ஆர்.எல்.எப்.

இந்த விடயங்களை உற்று நோக்கினால் கூட்டமைப்பிற்குள் அடிப்படையிலேயே ஏதோ பிரச்சினையிருக்கிறது என்பதை ஒருவரால் மிகவும் இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும். இதற்கு பிரதான காரணம் கூட்டமைப்பிற்கென்று ஒரு கொள்கை நிலைப்பட்ட கட்டமைப்புசார் செயற்பாடு இல்லை. அப்படியொன்று இருந்திருந்தால் இவ்வாறான வெளியேற்றங்கள் நிகழ்ந்திருக்காது. ஆனால் இந்த வெளியேற்றங்களுக்கு ஒவ்வொரு கட்சியினதும் பதவிநிலை சார்ந்த நலன்கள்தான் காரணமென்று கூறிச் செல்பவர்கள் உண்டு. ஒரு வேளை சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு தேசிய பட்டியல் மூலம் இடம் வழங்கப்பட்டிருந்தால் சுரேஸ் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிருக்க மாட்டார் என்று கூறுபவர்களும் உண்டு. அதில் உண்மையும் இருக்கலாம் ஆனால் அவ்வாறு நிகழ்ந்திருந்தாலும் சுரேஸ் தொடர்ந்தும் சம்பந்தனுக்கு ஒரு தலையிடியாகவே இருந்திருப்பார். ஏனெனில் சுரேஸ், கூட்டமைப்பின் பதிவிற்காகவும், ஒரு வலுவான கட்டமைப்பிற்காகவும் உள்ளுக்குள் இருந்தவாறே தொடர்ச்சியாக பேசி வந்தவர். இது அனைவரும் அறிந்த உண்மை. தேசிய பட்டியல் விவகாரம் பேசுபொருளாக இருந்த நேரத்தில் புளொட் தலைவர் சித்தார்த்தன் அதனை சுரேசுக்கு வழங்குவதான் சரியாக இருக்குமென்றே வாதிட்டிருக்கிறார். ஆனால் சம்பந்தனோ சித்தார்த்தனை கையாளுவதற்கு அப்போது அதனை சுழற்சி முறையில் டெலோவிற்கு தருவதாக ஓரு கதையை கூறி, விடயத்தை திசைதிருப்பினார். இறுதியில் அது எவருக்கும் இல்லாமல் போனது. அன்று தேசிய பட்டியல் வழங்கப்பட்டவர்களின் பின்புலத்தை நோக்கினால் அதனை சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு வழங்க வேண்டுமென்று சித்தார்த்தன் கூறியது சரியான ஒன்றுதான்.

இவ்வாறு பல அனுபவங்களை மேற்படி மூன்று கட்சிகளும் கண்டிருக்கின்றன. அரசியலில் முடிவுகளை மேற்கொள்வதற்கு அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்ளுதல் அவசியம். கடந்தகாலத்திலிருந்து கற்றுக்கொள்ளாத எந்தவொரு கட்சியாலும் நிகழ்காலத்தை கையாள முடியாது, நிகழ்காலத்தை கையாள முடியாத கட்சிகளால் எதிர்காலத்தை எதிர்கொள்ள முடியாது. எதிர்காலத்தை எதிர்கொள்ள தகுதியற்றவர்களால் என்ன பயனை ஒரு மக்கள் கூட்டம் பெற முடியும்?

Telo-Plot-Eprlf

இது தொடர்பில் எனது முன்னைய பத்திகள் சிலவற்றிலும் கூறியிருக்கிறேன். இப்போதும் தேவை கருதி கூறியதையை கூற வேண்டியிருக்கிறது. முன்னாள் ஆயுத விடுதலை அமைப்புக்களான டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் புளொட் ஆகியயை தங்களுக்குள் இணைந்து செயற்படுவது தொடர்பில் ஒரு புரிதலுக்கு வருவது அவசியம். மூன்று கட்சிகளும் ஒரு பொது உண்பாட்டிற்கு வருவதன் மூலம் விக்கினேஸ்வரனுடன் கைகோர்க்கும் ஒரு முடிவை எடுக்கலாம். விக்கினேஸ்வரன் என்ன முடிவை எடுத்தாலும் அந்த முடிவுக்கு ஆதரவாக இருக்கும் ஒரு தீர்மானத்திற்கு மூன்று கட்சிகளும் வர முடியும்.

பொதுவாக இவ்வாறான கட்சிகள் ஒன்றுபட முற்படும் போது எப்பொதுமே கடந்தகாலத்தை முன்னிறுத்தி சிந்திக்க முற்படுவதுண்டு. ஒவ்வொருவரும் மற்றவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை முன்னிறுத்தி சந்தேகங்களை எழுப்புவதுண்டு. ஆனால் இவ்வாறானவர்கள் ஒரு விடயத்தை புரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. முரண்பாடுகள் தவிர்க்கவே முடியாதவை. அது மனித இயல்பிலிருந்து வருவது. மனிதர்கள் சம்மந்தப்படும் இடங்களில் எல்லாம் முரண்பாடுகளும் இருக்கவே செய்யும். அதுவே மனிதவியல் யதார்த்தக் கோட்பாடு. (ர்ரஅயn யெவரசந சநயடளைஅ) எனவே முரண்பாடுளை துருவி ஆராயாமல், உடன்படக் கூடிய புள்ளிகளை தேடுவதுதான் முன்நோக்கிப் பயணிப்பதற்கான சிறந்த வழி. இதனை விளங்கிக் கொண்டால், சம்பந்தனும் திருந்த இடமுண்டு. ஆனாலும் சம்பந்தன் போன்ற, திமிரின் உச்சத்திலிருக்கும் மனிதர்கள் திருந்துவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு.

சம்பந்தன், கூட்டமைப்பு என்னும் பெயரை தனது பூரண கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே கூட்டமைப்பை எப்போதும் ஒரு பலவீனமான அமைப்பாக வைத்துக் கொள்ள விரும்புகிறார். இது அவரிடமுள்ள ஆதிக்க குணாம்சத்தின் விளைவு. ஒரு அமைப்பு பலவீனமாக இருக்கின்ற போதுதான் அந்த அமைப்பை ஒரு சிலர் அவர்களது சுயவிரும்பின் பெயரில் இயக்க முடியும். பலமான கட்டமைப்புக்கள் இருக்கின்ற அமைப்புக்களை தனிநபர்கள் ஒரு எல்லைக்கு மேல் கையாள முடியாது. நான் இங்கு அமைப்புக்கள் என்று குறிப்பிடுவது ஜனநாயக அமைப்புக்களை மட்டுமே. கூட்டமைப்பிற்கென ஒரு வலுவான கட்டமைப்பை உருவாக்குமாறு கூட்டமைப்புக்குள்ளும், கூட்டமைப்புக்கு வெளியிலும் பலரும் வாதிட்ட போதும் சம்பந்தன் அதற்குச் செவி கொடுக்கவில்லை. சம்பந்தனிடமுள்ள சுயநல ஆதிக்க விருப்பம்தான் அதற்குக் காரணம். கூட்டமைப்பு எப்போதுமே தமிழரசு கட்சியின் பிடிக்குள் இருக்குமாறு சம்பந்தன் பார்த்துக் கொள்கின்றார் அதே வேளை தமிழரசு கட்சியும் ஒரு தளம்பல் நிலையில் இருக்குமாறும் பார்த்துக் கொள்கின்றார். மொத்தத்தில் எப்போதும் தன்னைச் சுற்றி பலவீனமானவர்கள் இருக்க வேண்டுமென்பதில் சம்பந்தன் கண்ணும் கருத்தும் கொண்டிருக்கிறார். சம்பந்தனின் மேலாதிக்கத்தால் தமிழ் மக்களுக்கு நன்மை வந்திருந்தால் இதனை நாம் கண்டும் காணாமல் விட்டுவிடலாம். ஆனால் அப்படியெதுவும் நடக்கவில்லை.

இந்த இடத்தில்தான் ஒரு கேள்வி எழுகிறது. சம்பந்தனின் சுயநல அரசியல் ஆதிக்கப் போக்குடன், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான டெலோவும் புளொட்டும் தொடர்ந்தும் இழுபட்டுச் செல்லப் போகிறதா அல்லது முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் என்னும் வகையில் தங்களுக்குள் ஒரு புரிந்துனர்வை ஏற்படுத்திக் கொள்ளப் போகின்றனவா? மேற்படி மூன்று கட்சிகளும் தங்களுக்குள் ஜக்கியமொன்றை ஏற்படுத்துவதற்கான தேவை இருக்கின்ற அதே வேளை அதற்கான நியாயமான காரணங்களும் உண்டு. ஒருவருக்கு தீர்மானம் எடுப்பதற்கான சகல ஆற்றலிருந்தும், அவர் தீர்மானமொன்றை மேற்கொள்ளாமல் இருக்கிறார் என்றால் அது ஒரு மோசமான அரசியல் தவறாகும்.