செய்திகள்

டெல்லியில் 67 தொகுதிகளை வென்றது ஆம் ஆத்மி

புதுடில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது. புதுடில்லியின் முதல்வராக அர்விந்த் கேஜ்ரிவால் வரும் சனிக்கிழமை பிப்ரவரி 14-ம் தேதி பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டில்லி சட்டப் பேரவையின் 70 தொகுதிகளுக்கான தேர்தலில் 67.14 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் ஆம் ஆத்மிக்கு மொத்தம் 54.3 சதவீத வாக்குகளும் பாஜக-வுக்கு 32.2 வாக்குகளும் காங்கிரஸ் கட்சிக்கு 9.7 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அதே தினத்தில் பதவி ஏற்கும் அர்விந்த் கேஜ்ரிவால்

கடந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதிதான் தனது 49 நாட்கள் ஆட்சிக்குப் பிறகு லோக்பால் மசோதா முறியடிக்கப்பட்டதை அடுத்து அர்விந்த் கேஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்தார்.

தற்போது சரியாக ஒரு ஆண்டு கழித்து அபார வெற்றியுடன் பிப்ரவரி 14ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் கேஜ்ரிவால் முதல்வராக மீண்டும் பதவியேற்கிறார்.

புதுடில்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் நுபுர் சர்மாவை, அர்விந்த் கேஜ்ரிவால் 31,583 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.

2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் கோட்டையாக இருந்த டெல்லியை தன்வசமாக்கிய அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லியின் 7-வது முதல்வராக டிசம்பர் 28-ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் பதவியேற்றார்.

அப்போது 3 முறை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட ஷீலா திக்சித்தை 25,864 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார் கேஜ்ரிவால். பிறகு 49 நாட்கள் ஆட்சி செய்த பிறகு பல்வேறு இடையூறுகள் ஏற்பட பிப்ரவரி 14ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

டில்லி தேர்தலில் படுமோசமாகத் தோல்வியடைந்த இந்த தினத்தில் ஆம் ஆத்மி அலையையும் மீறி 3 பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

ஜகதீஷ் பிரதான் (முஸ்தபாபாத் தொகுதி), விஜேந்தர் குமார் (ரோஹிணி), மற்றும் ஓம் பிரகாஷ் சர்மா (விஷ்வாஸ் நகர்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இதில் பிரதமர் நரேந்திர மோடி ரோஹிணி மற்றும் விஷ்வாஸ் நகர் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜக்தீஷ் பிரதான் காங்கிரஸ் வேட்பாளரை 6,031 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, குமார் மற்றும் சர்மா ஆகியோர் முறையே 5,367 மற்றும் 10,158 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மியை தோற்கடித்தனர்.

மற்ற 67 பாஜக வேட்பாளர்கள் (முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி உட்பட), ஆம் ஆத்மியிடம் படுதோல்வியைச் சந்தித்தனர்.

டில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் இடதுசாரிக்கூட்டணி கடும் பின்னடைவைச் சந்தித்தது. 7 கட்சிகள் இணைந்த இடது கூட்டணியைச் சேர்ந்த 15 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

ஒரு வேட்பாளர் கூட 1000 வாக்குகளைப் பெற முடியவில்லை. பத்லி தொக்குதியில் போட்டியிட்ட எஸ்.யு.சி.ஐ-சி வேட்பாளர் மட்டும் 947 வாக்குகளை அதிகபட்சமாக பெற்றார். சிபிஎம் வேட்பாளரான ரஞ்ஜித் திவாரி கரவால்நகர் தொகுதியில் வெறும் 712 வாக்குகளே பெற்று டெபாசிட் இழந்தார்.

அதே போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அப்துல் ஜப்பார் 644 வாக்குகளையும், சஞ்ஜீவ் குமார் ரானா 542 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

அனைத்திந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியைச் சேர்ந்த ராகேஷ் சர்மா, முண்ட்கா தொகுதியில் 52 வாக்குகளையும் மற்றொரு இடத்தில் இவரது சகா ஹரிசங்கர் சர்மா 49 வாக்குகளையே பெற முடிந்தது.