செய்திகள்

டெல்லியை வீழ்த்திய பெங்களூர்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று புதுடெல்லியில் நடந்த ஆட்டத்தில் டெல்லி டேர்டேவில்ஸ்–ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய டெல்லி அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது.

மிட்செல் ஸ்டார்க், வருண் ஆரோன் ஆகியோரின் அபார பந்து வீச்சால் டெல்லி அணி 95 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஜாதவ் 33 ரன் எடுத்தார். ஸ்டார்க் 3 விக்கெட்டும், ஆரோன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் விளையாடிய பெங்களூர் அணி 10.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 99 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கிறிஸ் கெய்ல் 62 ரன்னும், கோலி 35 ரன்னும் எடுத்தனர்.

வெற்றி குறித்து கோலி கூறியதாவது:–

ஸ்டார்க், வருண் ஆரோன் பந்துவீச்சு அபாரமாக இருந்தது.

ஸ்டார்க் சுவிங் யாக்கர் வீசி விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது மற்ற பந்து வீச்சாளர்களுக்கு மனவலிமையை அதிகப்படுத்தியது. கடந்த போட்டியில் அபார வெற்றி பெற்றோம். அந்த உத்வேகத்தை இதிலும் காட்டினோம். இந்த உத்வேகத்தை பெற்றுவிட்டால் அது தொடர வேண்டும்.

கிறிஸ் கெய்ல் வெளியே பார்ப்பதற்கு நிதானமாக இருப்பார். ஆனால் உள்ளுக்குள் சிறிது பதட்டம் இருக்கும். நான் வெளிப்படையாக இருப்பேன். இதனால் எங்கள் இடையே சரியாக புரிந்துணர்வு உள்ளது. இதனால் இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லி கேப்டன் டுமினி கூறியதாவது:–

நாங்கள் அனைத்து துறையிலும் மோசமாக செயல்பட்டோம். இதில் இருந்து நிறைய பாடங்களை கற்று கொள்ள வேண்டும். நாங்கள் பார்ட்னர்ஷிப்பை உருவாக்க தவறிவிட்டோம். அடுத்த போட்டிக்கு 3 நாள் இடைவெளி இருக்கிறது. அதில் அணியை ஒருங்கிணைப்பது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெங்களூர் அணி 29–ந் தேதி ராஜஸ்தானையும், டெல்லி அணி மே–1–ந் தேதி பஞ்சாப்பையும் சந்திக்கிறது.