செய்திகள்

டெல்லி வருமாறு ஜனாதிபதி மைத்திரிக்கும் இந்தியா அழைப்பு: ரணிலை அடுத்து அவரும் பயணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை புதுடெல்லி வருமாறு, இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. மெதிரிகிரியவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே, தமக்கு மீண்டும் இந்தியா வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதான தகவலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டார்.

இந்திய அரசாங்கத் தலைவர்களைச் சந்திப்பதற்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், பெரிய சகோதரனான இந்தியா, இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்பையிட்டு தாம் மகழ்ச்சி கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஈரானிய அரசாங்கத்திடம் இருந்து வந்துள்ள திடீர் அழைப்பையடுத்து விரைவில் அங்கும் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும், மைத்திரிபால சிறிசேன கூறினார்.

சீனாவுடன் ஏற்பட்டுள்ள நெருக்கம், எட்கா உடன்பாடு மற்றும் அனுமன் பாலத்துக்கு சிங்களத் தேசியவாத சக்திகளிடம் எதிர்ப்புகள் எழுந்துள்ள சூழலிலேயே ஜனாதிபதிக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

அண்மையில் சீனாவுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்தி விட்டுத் திரும்பியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், புதுடெல்லி வருமாறு இந்தியா அழைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
R-06