செய்திகள்

ட்விட்டர் கணக்கு இல்லாத ஜோதிகா… விளக்கம் சொல்லும் சூர்யா

“பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி போல என் மனைவி ’36 வயதினிலே’ படத்தின் படப்பிடிப்பின் போது இரவுகளில் அடுத்த நாளுக்கான டையலாக்குகளை நடித்து பார்த்துக் கொண்டிருப்பார்” என ஜோதிகாவைப் பற்றி 36வயதினிலே பட வெற்றிக் கொண்டாட்டத்தில் சூர்யா பேசினார்.

இந்தப் படம் ஓர் ஆசீர்வதிக்கப்பட்ட பயணம். திடீர்னு படத்தோட கதையை இயக்குநர் சொன்னார். வேகவேகமா பட வேலைகளும் முடிந்து மிகப்பெரிய வெற்றியும் பெற்றுள்ளது. இந்தப்படம் வெற்றிப் படம் என்பதை தாண்டி நிறைய பெண்களின் வாழ்க்கைக்கு முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது. பெண்கள் மட்டுமில்லாமல், ஆண்களுக்கும் தங்களுடையை மனைவி, குழந்தைகள் மற்றும் தாய் மேலான பார்வை மாறியிருக்கிறது. இதுவே இந்தப் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. ஜோதிகா நடித்து வெளிவரவிருக்கும் படம் என்பதால், எல்லோரையும் போலவே எனக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகத்தான் இருந்தது. என்னுடைய மனைவி என்பதை தாண்டி ஜோதிகாவின் நடிப்பு இந்தப்படத்தில் என்னை ஈர்த்துவிட்டது என்று சிலிர்ப்புடன் பேசினார் சூர்யா.

36வயதினிலே வெற்றிக் கொண்டாட்டத்தில் மற்றுமொரு நிகழ்வும் நடந்தேறியது. இந்தப்படத்தில் பெண்கள் எப்படி முன்னேறுகிறார்களோ அதுபோல, நிஜத்திலும் பெண்களின் முன்னேற்றத்திற்காக சூர்யாவின் அகரம் நிறுவனம் சார்பாக 25 பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான உதவிகளையும் இந்த விழாவில் செய்துகொடுத்தது 36வயதினிலே டீம். அதில் ஒரு பெண்ணிற்கு இரண்டு கால்களுமே கிடையாது. அவர்களுக்கு சென்னையில் பெண்கள் அழகு நிலையம் வைக்க உதவி செயதுள்ளது. அதுபோல, அனைத்துப் பெண்களையும் மேடைக்கு அழைத்து அவர்களுக்கான உதவிகளையும் இந்த நிகழ்ச்சியின் மூலம் உதவினார் தயாரிப்பாளர் சூர்யா.

நிகழ்சியின் தொடர்ச்சியாக சூர்யாவிடம் பல கேள்விகளை செய்தியாளர்கள் முன்வைத்தனர்.

உங்க மனைவிக்கு இந்தப்படத்திற்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தீர்கள்?

“இப்ப இருக்கிற டாப் நடிகைகள் என்ன சம்பளம் வாங்குறாங்களோ, அந்த சம்பளத்தை ஜோவுக்கு தரணும் என்று முடிவெடுத்திருக்கிறேன். இன்னும் கொடுக்கல சீக்கிரமே கொடுத்து விடுகிறேன்.

உங்க வீட்டு மொட்டைமாடியில் காய்கறி தோட்டம் அமைத்திருக்கிறீர்களா?

“ நாங்க குடியிருக்குற வீட்டின் மொட்டைமாடி எங்களுக்கு சொந்தமில்லை. எனவே அனுமதி கேட்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறோம் என்றார் சூர்யா.

2டி தயாரிப்பு நிறுவனத்தில் முதல் தயாரித்த படம் 36 வயதினிலே, ஏதும் காரணம் இருக்கிறதா?

“ 2டி என்னுடைய இரண்டு பசங்களின் முதல் எழுத்துக்களே. அதனால், முதல் தயாரிக்கும் படம் அம்மாவின் படமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப்படத்தை எடுத்தோம்.

ஜோதிகா, ரசிகர்களுக்கு நன்றியைக் கூட உங்களின் (சூர்யா) ட்விட்டர் கணக்கில் தான் போட்டிருந்தார். ஒரு ட்விட்டர் கணக்கை வைத்திருக்க கூட ஜோதிகாவிற்கு அனுமதி நீங்கள் தரவில்லையா?

“ அப்படியெல்லாம் இல்லை. அவங்களே இப்போதான் அதைப் பற்றி கத்துட்டு வராங்க. எனக்கே முழுதாக ட்விட்டர் பற்றி தெரியாது. அதுனால அதுக்கும், எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி சிரித்து முடித்தார் சூர்யா.

36 வயதினிலே படத்தில் கேட்கப்படும் கேள்வி போலவே, பெண்கள் தன்னுடைய இலட்சியத்தை அடையாமல் போவதற்கு என்ன காரணம்?

“ குறைந்தது ஒரு அரைமணி நேரமாவது உங்கள் மனைவியோடு நேரம் ஒதுக்குனீங்கனா அவங்களோட எண்ணங்கள் என்னனு தெரியவரும் என்றார்.

அதே கேள்விக்கு ஜோதிகா பதிலளிக்கும் போது, “ கல்யாணத்திற்குப் பிறகு கணவர்கள் தான் காரணம், உங்களின் மேல் பாசமாக இருக்க உங்கள் மனைவி இருக்கிறார்கள். அவர்களிடம் பேசினீங்கன்னா அவங்க கனவு என்னவென்று தெரிந்துவிடும். அவர்களுக்கு ஆதரவா இருந்தீங்கனா கண்டிப்பாக அவர்களும் சாதிப்பார்கள்” என்று முடித்தார் ஜோ.