செய்திகள்

தஞ்சம்கோருவோரின் ஒரு வார காலப் போராட்டம் முறியடிப்பு: அவுஸ்திரேலியப் பிரதமர்

ஆஸ்திரேலியாவுக்கு அகதித் தஞ்சம் கோரி வந்தவர்கள் பப்புவா நியூகினியின் மனுஸ் தீவின் தடுப்பு முகாம் ஒன்’றில் கடந்த ஒரு வார காலமாக நடத்தி வந்த போராட்டத்தை முகாம் காவலர்கள் முறியடித்ததாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் கூறுகிறார்.

கடந்த ஒரு வார காலமாக இத்தடுப்பு முகாமில் உள்ள தஞ்சம் கோரிகள் முகாமுக்குள் தங்களைத் தாங்களே தடுத்து வைத்துகொண்டு உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த முகாமுக்குள் திங்கட்கிழமை பிற்பகல் காவலர்கள் நுழைந்ததாகவும், ” ஓரளவு பலப் பிரயோகத்துக்குப் பின்” அந்த முற்றுகை முறியடிக்கப்பட்டதாகவும் ஆஸ்திரேலிய அரச தலவர்கள் கூறுகின்றனர்.

“இந்த வளாகத்தில் நடத்தப்பட்டு வந்த தடுப்பு முற்றுகை இப்போது அகற்றப்பட்டுவிட்டது” என்றார் ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட்.. முகாம் காவலர்கள் மட்டுமே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், போலிசார் தலையிடுமளவுக்கு நிலைமை கட்டுமீறவில்லை என்றும் ஆஸ்திரேலியக் குடிவரவு அமைச்சர் பீட்டர் டட்டன் கூறினார்.

ஆனாலும், அகதிகள் நடவடிக்கைக்கான கூட்டணி என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த இயான் ரிண்டோல் இந்த நடவடிக்கையில் 58 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார். பலர் இந்த நடவடிக்கைக்குப் பின்னர் இதே முகாமில் உள்ள தனிமைச் சிறை பகுதி ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் , மேலும் சிலருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இதே தீவில் உள்ள மற்ற முகாம்களில் நிலைமை எப்படி இருக்கிறது என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை. இந்த தஞ்சம் கோரிகளில் அதிகாரபூர்வமாக அகதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்களை மனுஸ் தீவின் தலைநகர் லோரெஙகௌவுக்கு மாற்றும் திட்டத்துக்கு எதிராகவே இந்த சமீபத்திய போராட்டம் நடந்தது என்று கூறப்படுகிறது.