செய்திகள்

தனியார் துறையின் சம்பளத்தை அதிகரிக்குமாறு பேராட்டங்களை நடத்த தொழிற்சங்கங்கள் திட்டம்

அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டதை போன்று தனியார் துறையினருக்கு  சம்பள அதிகரிப்பை வழங்குமாறு  கோரி போராட்டங்களை நடத்துவதற்கு தனியார் துறை தொழிற் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இதன்படி எதிர்வரும் நாட்களில் ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட தொழிற் சங்க ரீதியிலான போராட்டங்களை நடத்த சங்கங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி 29ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்ட அதேவேளை தனியார் துறையினரின் சம்பளத்தை 2 ஆயிரத்து 500 ரூபாவால் அதிகரிப்பதற்கு நடவடிக்கையெடுப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தனியார் துறையினரின் சம்பளம் இன்னும் அதிகரிக்கப்படாதே இருக்கின்றன.
இந்நிலையில் தனியார் துறையினரின் சம்பள அதிகரிப்பு தொடர்பான தொழிற் சங்கங்களின் யோசனைகள் அடங்கிய சட்ட மூலமொன்று அஜித் குமார எம்.பியினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் அது தொடர்பான சுற்று நிரூபமொன்றும் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் அது இன்னும் நடைமுறைக்கு வராதிருக்கும் நிலைமையிலேயே தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதாக சுதந்திர வர்த்தக வலய ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டாளர் என்டன் மார்க்கஸ் தெரிவித்துள்ளார்.