செய்திகள்

தனுஸ்கோடியில் பாரதப் பிரதமர் பிரித்தானியப் பிரதமர் சந்திப்பை தமிழகத் தமிழர்கள் எதிர்க்க வேண்டும்

தொன்மையான வீரவரலாற்றைக் கொண்ட தமிழகத்தை இந்தியாவைக் கைப்பற்றிய பிரித்தானியர் சூறை செய்தனர். துமிழக மக்களைப் பட்டினிச் சாவிற்குத் தள்ளி அவர்களை அடிமைகளாக வேலை செய்வதற்குப் பழக்கப்படுத்தினர். மலைகளின் கடினமான பாறைகள் அமைத்தல், புகையிரதப் பாதைகள் அமைத்தல் என்பவற்றில் தமிழர்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். கிராமம் கிராமமாக தமிழர்களை புகையிரதங்களில் ஏற்றிய பிரித்தானிய ஆட்சியாளர்கள் அவர்களை சென்னைத் துறைமுகம் வழியாக மலேசியா, தென்னாபிரிக்கா, மடகாஸ்கார் போன்ற நாடுகளிற்கு வறுமையின் நிமித்தம் கூலி வேலை செய்வதற்கு அனுப்பினர். அதேபோல் தமிழகத்தின் தென்முனையான தனுஸ்கோடியூடு இலங்கையின் மலைநாட்டில் காடுகளை அழித்துத் தேயிலைத் தோட்டம் அமைக்கவும்,புகையிரதப் பாதைகள் அமைக்கவும், இறப்பர் தோட்டம் அமைக்கவும் அனுப்பப்பட்டனர். அவர்கள் இராமேஸ்வரம் வரை புகையிரதத்திலும், பின்னர் கப்பல் மூலம் தலைமன்னாருக்கும் அழைத்துவரப்பட்டனர்.

இவ்வாறு தமிழர்களின் சமூகவாழ்வை அழித்த பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் தற்போதைய பிரதமர், தமிழகத்திலிருந்து தமிழர்களை கூலிகளாக அனுப்பிய இறுதி இடத்தில் சந்திக்கும் போது அது தமிழர்களின் ஆழ்மனங்களை ஆழமாக புண்படுத்தும். அதற்கு உரிய கடுமையான எதிர்ப்பினையும், தமிழகம் வரும் பிரித்தானியப் பிரதமரிடம் சுமார் 200 வருடங்களுக்கு முன் பிரித்தானிய இராட்சியத்தால் மேற்கொள்ளப்பட்ட சமூக அழிப்பிற்கான மன்னிப்பினைப் பிரித்தானியா கோரவேண்டிய கட்டாயத்தினை தமிழக அரசியல்வாதிகள் முன்னெடுத்தல் அவசியம்.

சிவா செல்லையா