செய்திகள்

தபால் ஊழியர் மீது தாக்குதல்: செந்தில் தொண்டமானைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

தபால்காரரொருவர் மீது தாக்குதல் மேற்கொண்டார் என்று குற்றச்சாட்டு கூறப்படும், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு, பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊவா மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமானால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் தபால் ஊழியர் ஒருவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பதுளை  எல்ல தபால் நிலையத்தில் பணிபுரியும் பெரியசாமி ஞானசேகரன் என்ற தபால் ஊழியரே தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் ஞானசேகரன் தெரிவித்ததாவது;

எல்ல நியூபோர்ட் தோட்டத்தில் வாக்காளர் அட்டை, தபால்களை விநியோகித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது கூட்டம் ஒன்றை நிறைவு செய்துவிட்டு வந்த அமைச்சர் செந்தில் தொண்டமான் என்னை அவருக்கு அருகில் அழைத்தார். நீ ஐயாவா என்று கேட்டார். நான் இல்லை சேர் என்றேன். திடீரென என்னை அவர் கடுமையாகத் தாக்கினார்.

எதற்கு தாக்கினார் என்றே தெரியவில்லை. தாக்குதலில் எனது கையில் இருந்த வாக்காளர் அட்டை, தபால்கள், மற்றும் என்னுடைய பணம், நகைகள் காணாமல் போயுள்ளன. எனக்கும் அவருக்கும் முன்விரோதம் எதுவும் இல்லை.

கடந்த தேர்தலில் கூட வெற்றிலைக்குத் தான் வேலை செய்தேன். இந்த தாக்குதல் குறித்து எல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன் என்று தெரிவித்தார்.

இது குறித்து எல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம்  வினவியபோது, முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் சாட்சிகள் விசாரணை செய்யப்பட்ட பின் சம்பந்தப்பட்ட அமைச்சர் கைது செய்யப்படுவார் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையிலேயே செந்தல் தொண்டமானை கைது செய்வதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டது.