செய்திகள்

தமிழகத்தில் மாவோயிஸ்டு தம்பதி தங்கிய வீட்டுக்கு சீல்: 80 செல்போன்கள் பறிமுதல்

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரை அடுத்த கருமத்தம்பட்டியில் பேக்கரியில் தேநீர் குடித்துக் கொண்டிருந்த மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்த ரூபேஷ் (வயது 45), அவரது மனைவி சைனி (42) மற்றும் அனூப், கண்ணன், ஈஸ்வரன் ஆகியோரை கியூ பிரிவு பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

பொலிஸ் காவலில் எடுத்து அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.

இந்த நிலையில் மாவோயிஸ்டு இயக்க தம்பதிகளின் போட்டோ பத்திரிகைகளில் வெளியானதை பார்த்து திருப்பூர் டி.எம்.எஸ்.நகர் 2–வது வீதியில் வசித்து வரும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

காரணம் கடந்த 2½ ஆண்டாக மாவோயிஸ்டு தம்பதி அங்குள்ள ஈஸ்வரமூர்த்தி என்பவரது வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

வீடு வாடகைக்கு எடுத்த போது ரூபேஷ் தான் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்ப்பதாகவும், தனது மனைவி வங்கியில் பணியாற்றுவதாகவும் கூறியிருக்கிறார்.

தங்கள் வீட்டில் தங்கியிருந்தது மாவோயிஸ்டுகள் என்பதை அறிந்த ஈஸ்வரமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். உடனே திருப்பூரில் உள்ள கியூ பிரிவு பொலிசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் கோவையில் பொலிஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வரும் ரூபேஷ் மற்றும் சைனியை பொலிசார் திருப்பூருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டி.ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி, டி.எஸ்.பி. சேதுபதி ஆகியோர் விசாரித்தனர்.

அந்த வீட்டைச்சுற்றிலும் 50–க்கும் மேற்பட்ட பொலிசார் குவிக்கப்பட்டனர். விசாரணையின் போது திருப்பூர் தெற்கு தாசில்தார் கண்ணன் வரவழைக்கப்பட்டார். அவரது முன்னிலையில் வீட்டில் இருந்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 5.30 மணி வரை நடந்தது. விசாரணைக்கு பின்னர் வீட்டில் நடந்த சோதனையில் 80 செல்போன்கள், 200 சிம்கார்டுகள், 400–க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டு இயக்க பிரசார சி.டி.க்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் சிக்கியது.

பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்ட பின்னர் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் ரூபேஷ் மற்றும் சைனி ஆகியோர் மீண்டும் கோவைக்கு அழைத்து வரப்பட்டனர்.

திருப்பூரில் மக்களோடு மக்களாக மாவோயிஸ்டு தம்பதிகள் தங்கியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.