செய்திகள்

தமிழகத்தில் மிகப்பெரும் தாக்குதலுக்கு தீவிரவாதிகள் சதி: இலங்கை வழியாக ஊடுருவலாம்

 

தமிழகத்தில் மிகப் பெரிய தாக்குதல் நடத்துவதற்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

2008ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலைப் போல இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதலை நடத்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என்று மத்திய உளவுத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக தமிழகம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை தீவிரவாதிகள் இலக்கு வைத்திருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
தீவிரவாதி லக்வியை சிறையில் இருந்து விடுதலை செய்யவே கூடாது என்று பாகிஸ்தானுக்கு தொடர்ந்து இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனைக் கண்டிக்கும் வகையில் தற்கொலைப்படை தாக்குதலையோ அல்லது சிலரை பிணை கைதிகளாக பிடித்து வைத்தோ தாக்குதல் நடத்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்தாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்தியாவின் நெருக்கடிகளுக்கு பணிந்து போகும் பாகிஸ்தான் அரசுக்கு சங்கடத்தை உருவாக்கும் வகையில் மிகப் பெரிய தாக்குதலாக இருக்க வேண்டும் என்பதும் லஷ்கர் இ தொய்பாவின் திட்டம் என்பதால் நாட்டின் பதற்றமான பகுதிகளில் அனைத்து காவல்நிலையங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பிற மாநிலங்களில் இருந்து வருவோரை தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.