செய்திகள்

தமிழகத்தில் 12 ஸ்மார்ட் நகரங்களை நாளை தொடங்கி வைக்கிறார் மோடி

நாடு முழுவதும் 100 ‘ஸ்மார்ட் நகரங்கள்’ அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் 12 ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்படவுள்ளன. இதனை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

நாடு முழுவதும் 100 ‘ஸ்மார்ட் நகரங்கள்’ அமைக்கப்படும் என்று கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி சர்வதேச தரத்துக்கு இணையாக ரூ.48 ஆயிரம் கோடி செலவில் 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கவும் ரூ.50 ஆயிரம் கோடியில் 500 நகரங்களை அனைத்து வசதிகளுடன் புதுப் பிக்கவும் மத்திய அமைச் சரவை அண்மையில் அனுமதி வழங்கியது.

இவை தவிர அனைவருக்கும் வீடு திட்டத்தில் வரும் 2022-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 2 கோடி புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மூன்று திட்டங்களையும் பிரதமர் மோடி டெல்லியில் நாளை தொடங்கி வைக்கிறார்.

ஒட்டுமொத்தமாக 100 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 13 ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்பட உள்ளன. அந்த மாநிலத்தில் அடல் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் 54 நகரங்கள் புனரமைக்கப்பட உள்ளன.

உத்தரப் பிரதேசத்தை அடுத்து தமிழகத்தில் 12 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்பட உள்ளன. மேலும் அடல் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் 33 நகரங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

மகாராஷ்டிராவில் 10 ஸ்மார்ட் நகரங்களும் குஜராத், கர்நாடகாவில் தலா 6 ஸ்மார்ட் நகரங்களும் அமைய உள்ளன. அடல் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் மகாராஷ்டிரத்தில் 37, குஜராத்தில் 31, கர்நாடகாவில் 21 நகரங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

டெல்லியில் ஒரு ஸ்மார்ட் நகரமும் அடல் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ஒரு நகரமும் அமைக்கப்பட உள்ளன.

மேற்கு வங்கம், ராஜஸ்தானில் தலா 4, பிஹார், ஆந்திரா, பஞ்சாபில் 3 , ஒடிஸா, ஹரியாணா, தெலங்கானா, சத்தீஸ்கரில் தலா 2, ஜம்மு காஷ்மீர், கேரளா, ஜார்க்கண்ட், அசாம், இமாச்சலம், கோவா, அருணாசலம், சண்டீகரில் தலா ஒரு ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்பட உள்ளன.

அடல் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ஆந்திராவில் 31, ராஜஸ்தானில் 30, மேற்குவங்கத்தில் 28, பிஹாரில் 27, ஒடிஸா, ஹரியாணாவில் 19, கேரளத்தில் 18, பஞ்சாபில் 17, தெலங்கானாவில் 15, சத்தீஸ்கரில் 10 நகரங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்கள் இந்தத் தகவல்களை தெரிவித்துள்ளன.