செய்திகள்

தமிழக மீனவர் சவுதி அரேபியாவில் சுட்டுக்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்த மீனவர் சவுதி அரேபியா கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது வெள்ளிக்கிழமை கடல் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நாகர்கோவில் அருகேயுள்ள ஈத்தாமொழி பொழிக்கரை கடற்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மதிவளன் (45). இவருடன் மணக்குடியைச் சேர்ந்த செல்வம், சேவியர், பொழிக்கரையைச் சேர்ந்த பாஸ்கர், கோவளத்தைச் சேர்ந்த வில்சன், சகாய ஜண்சன், ராஜன், ராஜாக்கமங்கலம்துறையைச் சேர்ந்த ஜாண் ஆகியோர் சவுதி அரேபியாவுக்கு மீன்பிடித் தொழில் செய்வதற்காகச் சென்றனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை 8 மீனவர்களும் விசைப்படகு ஒன்றில் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது மற்றொருப் படகில் வந்த கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் படகைச் சுற்றி வளைத்தனர். படகில் இருந்த மீன்களை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் படகை நிறுத்தச்சொல்லி துப்பாக்கியைக் காட்டி மிரட்டினர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் படகை நிறுத்தாமல் வேகமாகச் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கடற்கொள்ளையர்கள் மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் மதிவளன் மீது குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதைத் தொடர்ந்து மீனவர்கள் படகை நிறுத்தாமல் கொள்ளையர்களிடம் இருந்து தப்பி கரைக்கு வந்தனர்.

இச்சம்பவம் குறித்து சவுதி அரேபியா காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் மதிவளன் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறுப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மதிவளன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட தகவல் சனிக்கிழமை பொழிக்கரையில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.

மதிவளன் கொலையால் பொழிக்கரை கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட மதிவளனுக்கு ஆனந்தன் ஜெரிட்டா (13) என்ற மகனும், ஆன்சல் ஜெரிசா (10) என்ற மகளும் உள்ளனர். இச்சம்பவம் குறித்து தமிழ்நாடு மீனவர் அறக்கட்டளைத் தலைவர் பி.ஜஸ்டின் கூறியதாவது: கடல் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் மதிவளன் சடலத்தை தாய்நாட்டுக்கு கொண்டு வரவும், கணவனை இழந்து வாடும் மேரி பெல்லாட்சி மற்றும் அவர்களின் குழந்தைகளின் மறுவாழ்வுக்காக தமிழக முதல்வர் ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை வேண்டும் என்றார் அவர்.