செய்திகள்

தமிழக மீனவர் விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 14 தமிழக மீனவர்களையும், அவர்களின் 3 படகுகளையும் விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில்,

தமிழகத்தில் இருந்து 3 படகுகளுடன் சென்ற 14 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்று கைது செய்துள்ளனர். இலங்கைக் கடற்படை வசம் ஏற்கெனவே தமிழக மீனவர்களின் 18 படகுகள் உள்ளன என்பதை தாங்கள் அறிவீர்கள். இலங்கை வசமிருந்த 80 படகுகளில் 16 படகுகள் முற்றிலும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. மீன்பிடி படகுகளும், மீன்பிடி சாதனங்களுமே ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பதாக உள்ளன. அவற்றை இலங்கை அதிகாரிகள் வேண்டுமென்றே சிறைபிடித்து வைத்துள்ளனர். இது, தமிழகத்திலுள்ள மீனவ சமுதாயத்தினரிடையே மிகப்பெரிய அளவுக்கு விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக-இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. இதன்மூலம், மீனவர்கள் பிரச்னைக்கு ஒரு நிரந்தரமான, நீடித்த தீர்வு கிடைக்கும். இருநாட்டு மீனவர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் சாதகமான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வரும் நிலையில், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடத்துவதும், கைது செய்வதும் துரதிருஷ்டவசமானது.

மீனவர்கள் கைது செய்யும் விவகாரத்துக்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்துவதற்கான முன்முயற்சிகளை இந்திய அரசும் எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளால் லட்சக்கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், தூதரக ரீதியிலான வலுவான, தீர்க்கமான காலக்கெடுவுடன் கூடிய செயல் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.

மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மேலும், இந்தப் பிரச்னை குறித்து வெளியுறவுத் துறைக்கு தகுந்த அறிவுறுத்தல்களை வழங்கி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்களையும், அவர்களது 3 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இலங்கை கடற்படை வசம் ஏற்கெனவே உள்ள 18 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.